காதல் மனைவிக்கு சிகரெட்டால் சூடுவைத்து சித்ரவதை-கணவர் கைது
|செல்போனில் ஆபாச படம் பார்க்க மறுத்ததால் காதல் மனைவிக்கு சிகரெட்டால் சூடுவைத்து சித்ரவதை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு
செல்போனில் ஆபாச படம் பார்க்க மறுத்ததால் காதல் மனைவிக்கு சிகரெட்டால் சூடுவைத்து சித்ரவதை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
ஆபாச படம்
பெங்களூரு பானசாவடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் பிரதீப்(வயது 27). இவர் நித்யா என்ற இளம்பெண்ணை காதலித்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து இருந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பிரதீப் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து நித்யாவிடம் தகராறு செய்ததுடன் அவரை அடித்து, உதைத்ததாக தெரிகிறது.
மேலும் தனது செல்போனில் ஆபாச வீடியோவை பார்க்கும்படி நித்யாவுக்கு, பிரதீப் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் செல்போனில் ஆபாச படம் பார்க்க நித்யா மறுத்து உள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரதீப், நித்யாவின் உடலில் சிகரெட்டால் சூடுவைத்ததாக தெரிகிறது.
கைது
மேலும் மனதளவிலும், உடல் அளவிலும் நித்யாவுக்கு, பிரதீப் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் தனது வீட்டிற்கு நண்பர்களை அழைத்து வரும் பிரதீப், நண்பர்கள் முன்பு வைத்து நித்யாவை தாக்கியதாக தெரிகிறது. தனக்கு விவகாரத்து தரும்படி நித்யாவுக்கு, பிரதீப் தொல்லை கொடுத்து வந்து உள்ளார்.
இதுதவிர நித்யாவை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பிரதீப் கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த நித்யா, பிரதீப் மீது பானசாவடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப்பை கைது செய்து உள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.