தவறான அறுவை சிகிச்சையால் நோயாளிகள் பாதிப்பு - தனியார் மருத்துவமனைக்கு 'சீல்'
|தனியார் மருத்துவமனையில் கண்புரைக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட 8 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டு கண்களில் பார்வை குறைபாடு ஏற்படும் நிலைக்கு சென்றது.
போபால்,
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் அரசு சார்பில் கண்சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட 79 பேருக்கு அரசு நிதியுதவியுடன் அங்குள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கண்புரைக்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் அனைவரும் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் கண்புரைக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட 8 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டு கண்களில் பார்வை குறைபாடு ஏற்படும் நிலைக்கு சென்றது.
இதனையடுத்து பாதிப்படைந்த 8 பேர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு டாக்டர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் மாநில சுகாதாரத்துறையினர் நோயாளிகளுக்கு தவறான சிசிச்சை அளித்த தனியார் மருத்துவமனைக்கு 'சீல்' வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.