இந்திய அரசியலுக்கு ஆபத்து; கெஜ்ரிவால் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் - காங்கிரஸ் முன்னாள் எம்.பி. கருத்து
|டெல்லி முதல்-மந்திரி பதவியில் இருந்து கெஜ்ரிவால் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஞ்சய் நிருபம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறையினர் நேற்று ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கெஜ்ரிவாலை 6 நாட்கள்(வரும் 28-ந்தேதி வரை) அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால், முதல்-மந்திரி பதவியில் இருந்து உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஞ்சய் நிருபம் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
"டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது வாழ்க்கையின் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வருகிறார். ஒரு மனிதனாக அவர் மீது எனக்கு அனுதாபம் உண்டு. காங்கிரஸ் கட்சியும் அவருக்கு பகிரங்க ஆதரவு அளித்துள்ளது.
ஆனால் இந்திய அரசியலில் அறம் பற்றிய புதிய விளக்கத்தை கெஜ்ரிவால் எழுதிக் கொண்டிருக்கிறார். ஒருமுறை ஹவாலா வியாபாரி ஜெயின் டைரியில் அத்வானியின் பெயர் இடம்பெற்றிருந்தபோது, ஊழல் குற்றச்சாட்டுக்கு தார்மீக பொறுப்பேற்று அவர் பதவி விலகினார்.
ரெயில் விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று லால் பகதூர் சாஸ்திரி பதவி விலகினார். சில மாதங்களுக்கு முன்பு, ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், கைது செய்யப்படுவதற்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் தார்மீக நடத்தையை வெளிப்படுத்தினார்.
பல்லாயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றால், தந்தையின் வாக்குறுதியை நிறைவேற்ற ராமர் அரியணையைத் துறந்தார். யாருக்காக அரியணை பறிக்கப்பட்டதோ, அவரும் அரியணையில் ஏறவில்லை. இந்தியா அத்தகைய வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.
டெல்லியின் மதுபான ஊழலில் உண்மை என்ன என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் ஊழல் செய்ததாக ஒரு முதல்-மந்திரி மீது குற்றம் சாட்டப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவலில் இருக்கும் அவர் இன்னும் முதல்-மந்திரி பதவியில் நீடிப்பது என்ன மாதிரியான ஒழுக்கம்? அவர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இந்திய அரசியலில், வெறும் 11 வயதே ஆன ஒரு கட்சி, முற்றிலும் நெறிமுறையற்ற அரசியலுக்கு உதாரணமாக உள்ளது. கெஜ்ரிவால் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பது எதிர்காலத்தில் இந்திய அரசியலை இன்னும் வெறுமையாக மாற்றிவிடும். அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த ஆபத்தை அவர் புரிந்து கொள்ள வேண்டும்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.