லதா மங்கேஷ்கர் பிறந்த நாளில் அயோத்தியா சாலைக்கு அவரது பெயர் சூட்டுவது மகிழ்ச்சி: பிரதமர் மோடி
|பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் பிறந்த நாளில் அயோத்தியா நகரில் சாலைக்கு அவரது பெயர் சூட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவின் இசைக்குயில் என்றழைக்கப்பட்ட பழம்பெரும் சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர். கடந்த பிப்ரவரி மாதம் தனது 92-வது வயதில் உடல்நல குறைவால் காலமானார்.
உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில் லதா மங்கேஷ்கரின் நினைவாக புதிய குறுக்கு சாலை அமைக்கப்படும் என்றும் அவரது நினைவை போற்றும் வகையில் புதிய குறுக்கு சாலைக்கு அவரது பெயரிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவை பிறப்பித்த உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அதற்கான கட்டுமான பணிகளுக்கும் உத்தரவிட்டார். இதன்படி, அந்த சாலை உருவானது. அதற்கு, லதா மங்கேஷ்கரின் பிறந்த நாளான இன்று அவரது பெயர் சூட்டப்படுகிறது.
இதுபற்றி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மறைந்த சகோதரி லதா மங்கேஷ்கரை அவரது பிறந்த நாளில் நினைவுகூர்கிறேன். எண்ணற்ற முறை அவரிடம் உரையாடி உள்ளேன். அப்போதெல்லாம் அவர் அன்பு மழை பொழிவார். நினைவுகூர்வதற்கு பல விசயங்கள் உள்ளன.
அவரது பெயரில் அயோத்தியாவில் உள்ள சாலை ஒன்றுக்கு அவரது பெயர் இன்று சூட்டப்படுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் சிறந்த அடையாள சின்னங்களில் ஒருவரான அவருக்கு செலுத்தும் சரியான அஞ்சலியாக அது இருக்கும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.
இந்த பெயர் சூட்டும் நிகழ்ச்சியில், மத்திய கலாசார மந்திரி கிஷன் ரெட்டி, மாநில சுற்றுலா மற்றும் கலாசார மந்திரி ஜெய்வீர் சிங், லதா மங்கேஷ்கரின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் மற்றும் பிற உயரதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.