< Back
தேசிய செய்திகள்
சிவமொக்கா விமான நிலையம் கர்நாடக அரசிடம் ஒப்படைப்பு-மந்திரி எம்.பி.பட்டீல் பேட்டி
தேசிய செய்திகள்

சிவமொக்கா விமான நிலையம் கர்நாடக அரசிடம் ஒப்படைப்பு-மந்திரி எம்.பி.பட்டீல் பேட்டி

தினத்தந்தி
|
14 July 2023 3:31 AM IST

சிவமொக்கா விமான நிலையம் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஒப்படைத்துள்ளதாக தொழில்துறை மந்திரி எம்.பி.பட்டீல் கூறியுள்ளார்.

பெங்களூரு:-

நிர்வாக பணிகள்

தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்புத்துறை மந்திரி எம்.பி.பட்டீல் நேற்று பெங்களூருவில் தனது துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் எம்.பி.பட்டீல் பேசியதாவது:-

சிவமொக்கா விமான நிலையத்திற்கு சில ஊழியர்களை நியமிக்க வேண்டியுள்ளது. இந்த பணிகள் வருகிற 20-ந் தேதிக்குள் நிறைவு செய்யப்படும். அதன் பிறகு அந்த விமான நிலையம் செயல்பாட்டுக்கு வரும். மத்திய விமான போக்குவரத்துத்துறை, சிவமொக்கா விமான நிலைய நிர்வாக பணிகளை கர்நாடக அரசுக்கு ஒப்படைத்துள்ளது. இந்த பணியை மாநில அரசின் தொழில்-உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் மேற்கொள்ளும்.

முதல் விமானம்

இதன் மூலம் கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் முதல் விமான நிலையம் இதுவாகும். சட்டசபை தேர்தலின்போது அந்த விமான நிலையத்தில் 20 விமானங்கள் வந்து தரை இறங்கின. இதனால் விமான நிலையத்திற்கு ரூ.12 லட்சம் வருவாய் கிடைத்தது. வருகிற ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி விமான நிலையம் செயல்பாட்டுக்கு வருகிறது. அன்று முதல் விமான சேவை தொடங்கப்படுகிறது. அந்த விமானம் பெங்களூருவில் இருந்து வந்து தரை இறங்கும்.

விஜயாப்புரா விமான நிலையத்தில் இரவு நேரத்தில் விமானங்கள் தரை இறங்கும் வசதிகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு கூடுதலாக ரூ.12 கோடி வேண்டும். இதுவரை ரூ.350 கோடி செலவாகியுள்ளது. இன்னும் 3 மாதங்களில் அந்த விமான நிலைய பணிகள் நிறைவடையும்.

இவ்வாறு எம்.பி.பட்டீல் கூறினார்.

மேலும் செய்திகள்