சமூக வலைதளத்தில் பழக்கம்.. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது
|சமூக வலைதளத்தில் பழகி வந்த மாணவியை 4 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
புனே,
மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த 18 வயது நிரம்பாத மாணவி ஒருவர் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவர், சமூக வலைதளம் மூலமாக 4 ஆண் நண்பர்களுடன் பழகி வந்துள்ளார். இதில் இருவர் சிறுவர்கள் ஆவர். இந்த நான்கு பேரும் ஒருவரையொருவர் தனிப்பட்ட முறையில் அறிய மாட்டார்கள். மேலும், சமூக வலைதளம் மூலமாக சிறுமியுடன் பழகி வந்துள்ளனர்.
அப்போது சிறுமியிடம் நைசாக பேசி குறிப்பிட்ட பகுதிக்கு அழைத்து 4 பேரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் நகரின் வெவ்வேறு இடங்களில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
கல்லூரியில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான கூட்டத்தின் போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. கருத்தரங்கின்போது தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி கூறினார். மேலும் அவர்கள் வீடியோவும் எடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, "குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் மீது நாங்கள் வழக்குப் பதிவு செய்துள்ளோம். அவர்களில் இருவர் மைனர்கள் (வயது வெளியிடப்படவில்லை), அவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மற்ற இருவர் 20 முதல் 22 வயதுடைய இளைஞர்கள். அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றனர்.