< Back
தேசிய செய்திகள்
துருவநாராயண் மகனுக்கு காங்கிரஸ் டிக்கெட் வழங்க வேண்டும்; பா.ஜனதா எம்.எல்.சி. எச்.விஸ்வநாத் பேட்டி
தேசிய செய்திகள்

துருவநாராயண் மகனுக்கு காங்கிரஸ் டிக்கெட் வழங்க வேண்டும்; பா.ஜனதா எம்.எல்.சி. எச்.விஸ்வநாத் பேட்டி

தினத்தந்தி
|
15 March 2023 3:05 AM IST

சட்டசபை தேர்தலில் மறைந்த காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் துருவநாராயண் மகனுக்கு காங்கிரஸ் டிக்கெட் வழங்கவேண்டும் என்று பா.ஜனதா எம்.எல்.சி. எச்.விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.

மைசூரு:

சட்டசபை தேர்தலில் மறைந்த காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் துருவநாராயண் மகனுக்கு காங்கிரஸ் டிக்கெட் வழங்கவேண்டும் என்று பா.ஜனதா எம்.எல்.சி. எச்.விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.

துருவநாராயண் மறைவு

காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக இருந்த துருவநாராயண் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் இறந்தார். அவரது மறைவு சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது போன்று உள்ளது. இந்நிலையில் வருகிற சட்டசபை தேர்தலில் துருவநாராயணின் மகன் தர்ஷனுக்கு சீட்டு வழங்கும்படி, பா.ஜனதா எம்.எல்.சி. எச்.விஸ்வநாத், காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

மகனுக்கு டிக்கெட்

இந்நிலையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த எச்.விஸ்வநாத் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியில் ரவுடிகளுக்கு, ரியல் எஸ்டேட் மாபியா கும்பல்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. அப்படியிருக்ைகயில் கட்சிக்காக உழைத்த துருவநாராயணனின் மகனுக்கு ஏன் டிக்கெட் வழங்க கூடாது. கட்சிக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் துருவநாராயண். அவரது மகன் தற்போது வக்கீலுக்கு படித்து வருகிறார். அவரை அரசியலுக்கு கொண்டுவரவேண்டும். புதிய முகங்களை காங்கிரஸ் கட்சி அறிமுகம் செய்யவேண்டும். இது குறித்து டி.கே.சிவகுமார், சித்தராமையாவுடன் நான் பேசினேன். அவர்கள் சரி என்று கூறியுள்ளனர்.

பெங்களூரு-மைசூரு சாலை குறித்து பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த 10 வழிச்சாலை அமைத்த பெருமை காங்கிரசைத்தான் சேரும். ஏனென்றால் காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் நிதி ஒதுக்கப்பட்டது. முதலில் 2004-ம் ஆண்டு எஸ்.எம்.கிருஷ்ணா முதல்-மந்திரியாக இருந்தபோது, 4 வழிச்சாலை அமைக்கப்பட்டது. பின்னர் 6 வழிச்சாலையாக மாற்றப்பட்டது. பின்னர் 2013-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் சித்தராமையா, 10 வழிச்சாலையாக மாற்ற முடிவு செய்தார். இதற்காக ரூ.3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. மத்தியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார்.

காங்கிரசை சேரும்

அவர் அனுமதி அளித்தார். பணிகள் தொடங்கும்போது, ஆட்சி மாறிவிட்டது. மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் இந்த 10 வழிச்சாலைக்கு 4 முறை நிதி ஒதுக்கப்பட்டது. அதாவது ரூ 3 ஆயிரம் கோடியில் முடிக்கவேண்டும் என்று போடப்பட்ட திட்டத்திற்கு, ரூ.5 ஆயிரம் கோடி, ரூ.6 ஆயிரம் கோடி என்று நிதியை ஒதுக்கினர். இறுதியில் ரூ.9 ஆயிரம் கோடியில் இந்த சாலை பணிகள் முடிந்துள்ளது. இன்னும் சில பணிகள் முடிவடையவில்லை. அவை முடிந்தால் ரூ.12 ஆயிரம் கோடியில் வந்து நிற்கும்.

பிரதாப் சிம்ஹா, பா.ஜனதா கட்சிதான் 10 வழிச்சாலை பணிகளை முடித்ததாக கூறி கொள்கிறார். அவருக்கு இந்த வரலாறு தெரியாது. வரலாறு தெரியாமல் அவர் பேசி வருகிறார். இந்த 10 வழிச்சாலையால் 400 ஓட்டல்கள், 91 பெட்ரோல் நிலையங்கள், ஆயிரத்திற்கும் அதிகமான சிறிய வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பா.ஜனதா கட்சி என்ன செய்ய போகிறது என்பது தெரியவில்லை.

சுங்க கட்டணம்

சுங்க கட்டணம் வசூலுக்கு மக்களிடையே எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. ரூ.500, ரூ.1000 என்று வசூல் செய்வது தவறு. 118 கி.மீ சாலை என்பதால், ரூ.118 சுங்ககட்டணமாக வசூல் செய்யவேண்டும். ஆனால் தேசிய நெடுஞ்சாலைத்துறை கூடுதல் கட்டணம் வசூலித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 17-ந் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்