< Back
தேசிய செய்திகள்
ஞானவாபி மசூதி வழக்கு; வாரணாசி கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு மத்திய பிரதேச முதல்-மந்திரி வரவேற்பு
தேசிய செய்திகள்

ஞானவாபி மசூதி வழக்கு; வாரணாசி கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு மத்திய பிரதேச முதல்-மந்திரி வரவேற்பு

தினத்தந்தி
|
31 Jan 2024 8:37 PM IST

ஞானவாபி வழக்கு யாருக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பது தொல்லியல் துறையின் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளதாக மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.

போபால்,

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விசுவநாதர் கோவிலுக்கு அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. அந்த மசூதி, கோவிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என்றும் வாரணாசி கோர்ட்டு மற்றும் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இதை எதிர்த்து இஸ்லாமியர்கள் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மசூதி இருக்கும் இடம் கோவிலின் ஒரு பகுதி என்று இந்துக்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்படுகிறது. இந்தநிலையில், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதியில் இந்துக்கள் பூஜை நடத்த வாரணாசி கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.

வழிபாடு நடத்துவதற்கான பூசாரியை நியமிக்கவும் காசி விஸ்வநாதர் கோவில் அறக்கட்டளைக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்துக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அடுத்த 7 நாட்களுக்குள் பூஜை நடத்தப்படும் என கோர்ட்டில் தகவல் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ஞானவாபி மசூதி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஞானவாபி மசூதி வழக்கில் வாரணாசி கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை வரவேற்பதாக மத்திய பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"ஞானவாபி வழக்கில் வாரணாசி கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு ஒரு மைல்கல் ஆகும். இந்த முடிவை நான் வரவேற்கிறேன். இந்த வழக்கில் முடிவு யாருக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பது இந்திய தொல்லியல் துறையின் அறிக்கை மூலம் தெளிவாக தெரிய வந்துள்ளது. இது மிகவும் முக்கியமான நாள். இந்த தீர்ப்பு மிகவும் முக்கியமானது."

இவ்வாறு மோகன் யாதவ் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்