கொரோனா பயத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் மகனுடன் அடைந்திருந்த பெண் - 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்பு
|கொரோன பயத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் மகனுடன் அடைந்திருந்த பெண், 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்டார்.
குருகிராம்,
அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் கொரோனா தொற்றுக்கு பயந்து அடுக்குமாடி குடியிருப்பில் 3 ஆண்டுகளாக அடைந்திருந்த பெண் மற்றும் அவரது மகனை போலீசார் மீட்டனர்.
இது தொடர்பாக குழந்தைகள் நலக் குழு உறுப்பினர் உஷா சோலங்கி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
குருகிராமில் உள்ள சக்கர்பூரில் வசிக்கும் ஒருவர், கொரோனா பயம் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தனது மனைவியும் மகனும் ஒரு குடியிருப்பில் அடைந்திருப்பதாக போலீசாரிடம் புகாரளித்தார். அவரது மனைவி தன்னை வீட்டிற்குள் விடவில்லை என்றும் தன் மகனை வெளியே அனுப்ப மறுப்பதாகவும் கூறினார்.
வேலை காரணமாக வெளியே செல்வதால் வேறொரு பிளாட் வாங்கும்படி கூறியதாகவும் தெரிவித்தார். அவர்களுக்கு தேவையான பணம், மளிகைப் பொருட்களை அவர் வாங்கி கொடுத்துள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஒரு குழுவை அந்த குடியிருப்புக்கு அனுப்பினர்.
இதையடுத்து அந்த பெண் மற்றும் அவரது மகன் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவரது மகனுக்கு தற்போது 11 வயதாகிறது. அந்த பெண்ணின் மன நிலை பரிசோதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.