ஜார்கண்டில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கி சண்டை: பாதுகாப்பு படையினர் அதிரடி
|ஜார்கண்டில் மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
சைபாசா,
ஜார்கண்டின் மேற்கு சிங்பும் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜிகலடா, கொனிசா, ஹவாங்டி போன்ற கிராமங்களுக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் இருப்பதாக நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக சி.ஆர்.பி.எப். வீரர்கள் மற்றும் மாநில போலீசார் இணைந்த படையினர் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கே பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இரு தரப்பினருக்கும் இடையே சுமார் 15 நிமிடங்களுக்கு துப்பாக்கி சண்டை நடந்தது. பின்னர் மாவோயிஸ்டுகள் அங்கிருந்து தப்பி ஓடினர். அங்கு பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், மாவோயிஸ்டுகள் பதுங்கியிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் சிக்கின.
இந்த துப்பாக்கி சண்டை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மாவோயிஸ்டுகளின் மற்றொரு பிரிவினர் நேற்று மாநிலத்தில் 24 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஓரளவு பாதிக்கப்பட்டது.