< Back
தேசிய செய்திகள்
குஜராத்; 10 காலி பணியிடங்களுக்கு ஆயிரம் பேர் போட்டி, தள்ளுமுள்ளு:  வைரலான வீடியோ
தேசிய செய்திகள்

குஜராத்; 10 காலி பணியிடங்களுக்கு ஆயிரம் பேர் போட்டி, தள்ளுமுள்ளு: வைரலான வீடியோ

தினத்தந்தி
|
12 July 2024 12:34 AM GMT

குஜராத் 10 காலி பணியிடங்களுக்கு ஆயிரம் பேர் போட்டி போட்டு, தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் சிலர் கீழே விழுந்த சம்பவத்தில் ஆளும் பா.ஜ.க.வை காங்கிரஸ் சாடியுள்ளது.

ஆமதாபாத்,

குஜராத்தில் பரூச் பகுதியில் ஜாகாதியா இடத்தில் தனியார் என்ஜினீயரிங் நிறுவனம் ஒன்று உள்ளது. இதில் மொத்தம் இருந்த 10 காலி பணியிடங்களுக்கு ஆட்களை சேர்ப்பதற்கான நேர்காணல் நடந்துள்ளது. ஆனால், இதற்கு ஓராயிரத்து 800-க்கும் மேற்பட்டோர் போட்டி போட்டுள்ளனர்.

அவர்கள், அங்கலேஷ்வர் பகுதியில் நேர்காணல் நடந்த தனியார் ஓட்டலின் நுழைவு வாசலின் இரு பகுதியிலும் நெருக்கியடித்து உள்ளே புகுந்தனர். பலர் கதவுக்கு வெளியே ஒருவரையொருவர் முட்டி, மோதியபடி நின்றனர். இந்நிலையில், ஒரு கட்டத்தில் அவர்கள் நிற்க முடியாமல் கீழே விழுந்தனர். எனினும், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்நிலையில், அவர்கள் ஏறியதில் தடுப்புக்காக போடப்பட்டிருந்த உலோக வேலியும் சரிந்து விழுந்தது. இதில், சிலர் கீழே குதித்து தப்பினர்.

இந்த சம்பவம் பற்றி காங்கிரஸ் கட்சி தன்னுடைய எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் வீடியோ வெளியிட்டு, ஆளும் பா.ஜ.க.வை கடுமையாக சாடியுள்ளது. நாடு முழுவதும் வேலைவாய்ப்பின்மை காணப்படுகிறது என குற்றச்சாட்டாக தெரிவித்தது.

எனினும், பா.ஜ.க. எம்.பி. மன்சுக் வசாவா கூறும்போது, 10 காலியிடங்களை அவர்கள் நிரப்புகிறார்கள். அதற்கு முறையான விசயங்களை அவர்கள் குறிப்பிட்டு இருக்க வேண்டும். அந்த நிறுவனமே சம்பவத்திற்கு காரணம். இது வேதனை தருகிறது. இதுபோன்று மீண்டும் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்