குஜராத் கலவர குற்றவாளியின் டாக்டர் மகளை தேர்தலில் வேட்பாளராக களமிறக்கிய பாஜக...!
|டாக்டரான பயல் குல்கர்னிக்கு குஜராத் தேர்தலில் போட்டியிட பாஜக சீட் வழங்கியுள்ளது.
காந்திநகர்,
2022-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். குஜராத் கலவரத்தின் போது அம்மாநிலத்தின் நரோடா பத்யா என்ற நகரிலும் கலவரம் வெடித்தது. இப்பகுதியில் நடந்த கலவரத்தில் 97 பேர் கொல்லப்பட்டனர். நரோடா பத்யா கலவரத்தில் மனோஜ் குல்கர்னி உள்பட 32 பேர் குற்றவாளிகள் என 2012-ம் ஆண்டு அகமதாபாத் தீர்ப்பளித்தது. மனோஜ் குல்கர்னிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளி மனோஜ் குல்கர்னி உடல்நலத்தை கருத்தில் கொண்டு தறொது ஜாமினில் உள்ளார்.
இதனிடையே, 182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்தல் டிசம்பர் 1-ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 5-ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் குஜராத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. 166 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை 2 கட்டங்களாக பாஜக வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், பாஜக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் குஜராத் கலவர வழக்கு குற்றவாளியான மனோஜ் குல்கர்னியின் மகள் இடம்பெற்றுள்ளார்.
மனோஜ் குல்கர்னியின் மகள் பயல் குல்கர்னி. 30 வயதான பயல் குல்கர்னி டாக்டர் ஆவார். அகமதாபாத் நகரில் குர்குல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயல் குல்கர்னி டாக்டராக பணியாற்றி வருகிறார்.
பயல் குல்கர்னியை நரோடா தொகுதியில் வேட்பாளராக பாஜக களமிறக்கியுள்ளது. குஜராத் தேர்தலில் போட்டியிட பாஜக சீட் வழங்கியதை தொடர்ந்து டாக்டரான பயல் குல்கர்னி நரோடா தொகுதியில் பிரசாரத்தில் குதித்துள்ளார்.