குஜராத்தில் 2-ம் கட்ட தேர்தல்: அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் - தேர்தல் ஆணையம்
|குஜராத்தில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
ஆமதாபாத்,
182 உறுப்பினர் குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் முதல் கட்டமாக 89 தொகுதிகளில் கடந்த 1-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. சவுராஷ்டிரா, கட்ச் மற்றும் தெற்கு குஜராத் பிராந்தியங்களில் அடங்கியுள்ள இந்த தொகுதிகளில் 63.31 சதவீத வாக்குகள் பதிவானது. பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.
இதைத்தொடர்ந்து மீதமுள்ள 93 தொகுதிகளில் நாளை (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. ஆமதாபாத், வதோதரா, காந்திநகர் பகுதிகளை உள்ளடக்கிய வடக்கு மற்றும் மத்திய குஜராத் பிராந்தியங்களுக்கு உட்பட்ட 14 மாவட்டங்களில் இந்த தொகுதிகள் அடங்கியுள்ளன. இந்த தொகுதிகளில் சுமார் 60 கட்சிகளை சேர்ந்த 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களின் அரசியல் எதிர்காலம் நாளை நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்கும் வகையில் மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மாநில போலீசாருடன் இணைந்து துணை ராணுவமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளது.
இந்த நிலையில், குஜராத் 2-ம் கட்ட சட்டசபை தேர்தலில் அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறித்தியுள்ளது. இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறுகையில், "கடந்த 1-ம் தேதி நடைபெற்ற குஜராத் சட்டசபைக்கான முதல்கட்ட தேர்தலில் நகரங்களில் வாக்கு சதவீதம் குறைவாக இருந்தது. இதை ஈடுகட்டும் வகையில் 2-வது கட்ட தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டுகிறேன். அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.