குஜராத் கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம்: 2 போலீசார் இடமாற்றம், 6 பேர் சஸ்பெண்ட்
|குஜராத் கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் 2 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டதுடன், 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அகமதாபாத்,
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதனை அருந்திய பலரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இதனால் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி 21 பேர் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியானது. பின்னர் பலி எண்ணிக்கை 24-ஆக உயர்ந்தது. மேலும், சுமார் 50 பேர் இன்னும் பல இடங்களில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பொடாட் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சிறு-குறு வணிகர்கள் சிலர் சட்டவிரோதமான மதுபானத்தை மெத்தைல் ஆல்கஹால் அல்லது மெத்தனால் என்ற அதிக நச்சுத் தொழிற்சாலை கரைப்பான்களுடன் கலந்து கிராம மக்களுக்கு ஒரு பைக்கு ரூ 20க்கு விற்றதாக தெரியவந்துள்ளது. அதன்படி, தடயவியல் பகுப்பாய்வு பாதிக்கப்பட்டவர்கள் மித்தல் ஆல்கஹால் உட்கொண்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க இந்திய காவல்துறை மூத்த அதிகாரி சுபாஷ் திரிவேதி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை குஜராத் உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. ஜெயேஷ் என்ற ராஜூ என்பவர் தான் மேலாளராக பணிபுரிந்த அகமதாபாத்தில் உள்ள ஒரு குடோனில் இருந்து 600 லிட்டர் மித்தல் ஆல்கஹாலை திருடி, அதை தனது பொடாட்டை சேர்ந்த உறவினர் சஞ்சய் என்பவருக்கு ஜூலை 25ம் தேதி ரூ.40,000க்கு விற்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது ஒரு தொழில்துறை கரைப்பான் என்பதை அறிந்திருந்தும், சஞ்சய் இந்த ரசாயனத்தை போடாட்டின் பல்வேறு கிராமங்களில் உள்ள கொள்ளையர்களுக்கு விற்றுள்ளது தெரியவந்துள்ளது. இந்த கொள்ளையர்கள் ரசாயனத்தில் தண்ணீரை கலந்து நாட்டு மதுபானமாக மக்களுக்கு விற்பனை செய்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பொடாட் மற்றும் அகமதாபாத் காவல்துறை கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் மற்றும் காவலர்களை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜ்குமார் கூறியதாவது:- போடாட் எஸ்பி கரன்ராஜ் வகேலா மற்றும் அகமதாபாத் ஸ்பி வீரேந்திரசிங் யாதவ் ஆகியோரை இடமாற்றம் செய்துள்ளோம். இரண்டு துணை எஸ்பிகள் உள்பட ஆறு போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.