விமானத்தில் சந்தித்த பெண்ணை கோவா ஓட்டலில் பாலியல் வன்கொடுமை செய்த குஜராத் நபர் - அதிர்ச்சி சம்பவம்
|47 வயதான குஜராத் நபருக்கும் அந்த பெண்ணுக்கும் விமானத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பனாஜி,
குஜராத் மாநிலத்தை சேர்ந்த 47 வயது நபர் லட்சுமணன் ஷையர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் விமானத்தில் பயணிக்கும்போது அதேவிமானத்தில் பயணித்த பெண் பயணியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் செல்போன் எண்ணை லட்சுமணன் வாங்கியுள்ளார். பின்னர், இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர்.
இதனிடையே, இந்த வார தொடக்கத்தில் லட்சுமணன் கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர் பனாஜியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அசான்ரா கிராமத்தில் உள்ள ஓட்டலில் தங்கியுள்ளார். அதேபோல், அந்த பெண்ணும் தனியே கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த 23ம் தேதி அந்த பெண்ணை செல்போனில் தொடர்புகொண்ட லட்சுமணன் தன்னை சந்திக்க தான் தங்கியுள்ள ஓட்டலுக்கு வரும்படி கூறியுள்ளார். லட்சுமணனின் பேச்சை கேட்ட இளம்பெண் அவர் தங்கியுள்ள ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு பெண்ணை தன் அறைக்கு அழைத்து சென்ற லட்சுமணன் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இது குறித்து யாரிடமாவது கூறினால் கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஓட்டலில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த லட்சுமணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் வயது விவரத்தை போலீசார் வெளியிடவில்லை.