ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் இன்று தீர்ப்பு; மீண்டும் எம்.பி. பதவியை பெறுவாரா?
|ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் குஜராத் ஐகோர்ட்டு இன்று(வெள்ளிக்கிழமை) தீர்ப்பு அளிக்கிறது.
புதுடெல்லி,
சர்ச்சை கருத்து
கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பூர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. அதனால் அவர் தனது மக்களவை எம்.பி. பதவியை இழந்தார்.
இடைக்கால தடைக்கு மறுப்பு
அதை எதிர்த்து சூரத் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த ராகுல் காந்தி, அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கவும் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்கிய செசன்ஸ் கோர்ட்டு, தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. அதையடுத்து குஜராத் ஐகோர்ட்டை ராகுல் காந்தி நாடினார்.
கடந்த மே மாதம் நடந்த விசாரணையின்போது, அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த ஐகோர்ட்டு நீதிபதி ஹேமந்த் பிரச்சாக், கோடைகால விடுமுறைக்குப்பின் இறுதித்தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.
இன்று தீர்ப்பு
இந்த நிலையில் குஜராத் ஐகோர்ட்டு நேற்று வெளியிட்ட வழக்கு அட்டவணையின்படி, ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் 11 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படுகிறது. இதில் அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டால், ராகுல் காந்தி மீண்டும் தனது எம்.பி. பதவியை திரும்பப்பெறும் வாய்ப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.