அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் கோர்ட்டு சம்மன் : மே 23-ந்தேதி ஆஜராக உத்தரவு
|பிரதமர் மோடி பட்டப்படிப்பு சான்றிதழ் தொடர்பாக குஜராத் பல்கலைக்கழகத்தை விமர்சித்ததற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆமதாபாத் கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.
ஆமதாபாத்,
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை தனக்கு வழங்க உத்தரவிடக்கோரி, தலைமை தகவல் ஆணையரிடம் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் ெகஜ்ரிவால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விண்ணப்பித்தார். அதை ஏற்று, அவருக்கு அச்சான்றிதழை அளிக்குமாறு குஜராத் பல்கலைக்கழகத்துக்கு தலைமை தகவல் ஆணையர் கடந்த 2016-ம் ஆண்டு உத்தரவிட்டார்.
குஜராத் பல்கலைக்கழகம் தாக்கல் செய்த மனுவின் பேரில், அந்த உத்தரவுக்கு குஜராத் ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. நிலுவையில் இருந்த அம்மனு மீது கடந்த மாதம் தீர்ப்பு அளித்த ஐகோர்ட்டு, தலைமை தகவல் ஆணையர் உத்தரவை ரத்து செய்தது. அரவிந்த் ெகஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது.
அவதூறு வழக்கு
இந்த உத்தரவை தொடர்ந்து, குஜராத் பல்கலைக்கழகத்தை அரவிந்த் ெகஜ்ரிவாலும், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய்சிங்கும் விமர்சித்தனர். இது தொடர்பாக அவர்கள் மீது குஜராத் பல்கலைக்கழக பதிவாளர் பியுஷ் படேல், ஆமதாபாத்தில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
70 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க குஜராத் பல்கலைக்கழகத்தை இருவரும் அவதூறாகவும், கேலியாகவும் விமர்சித்ததால், மக்களிடையே அவநம்பிக்கை ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் கூறியிருந்தார்.
மே 23-ந் தேதி ஆஜராக உத்தரவு
அந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ஜயேஷ்பாய் சோவாடியா, அரவிந்த் ெகஜ்ரிவாலுக்கும், சஞ்சய்சிங்குக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். இருவர் மீதும் அவதூறு வழக்குக்கான முகாந்திரம் இருப்பதாக அவர் கூறினார். மே 23-ந் தேதி இருவரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். அரவிந்த் கெஜ்ரிவால், தனிப்பட்ட அந்தஸ்தில் கருத்து தெரிவித்து இருப்பதால், வழக்கில் அவரது பெயருக்கு முன்பு உள்ள 'முதல்-மந்திரி' என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என்றும் கூறினார்.