குஜராத் பால விபத்து: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 கோடி; அதானி தொண்டு நிறுவனம் நன்கொடை
|குஜராத் பால விபத்தில், இன்னும் பிறக்காத குழந்தை உள்பட பெற்றோரை இழந்த 20 குழந்தைகளின் நலனுக்காக ரூ.5 கோடி நன்கொடை அளிக்க அதானி தொண்டு நிறுவனம் முன்வந்து உள்ளது.
காந்திநகர்,
குஜராத்தில் மோர்பி மாவட்டத்தில் மச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் ஒன்று 8 மாத காலம் புனரமைக்கப்பட்டு, மறுபயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், 4 நாட்களில் கடந்த அக்டோபர் 30-ந்தேதி பாலம் இடிந்து விழுந்தது.
நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 135 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம் ஏற்பட்டு உள்ளது. 177 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். சிலர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த பாலம் மறுசீரமைப்பின்போது சரியாக புனரமைக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இதுதவிர துருப்பிடித்த, பழைய கேபிள் வயர்கள் மாற்றப்படாமல் இருந்தது மற்றும் அதிக சுமை உள்ளிட்டவை விபத்துக்கான காரணிகளாக கூறப்படுகின்றன.
பிரதமர் மோடி மற்றும் குஜராத் முதல்-மந்திரி சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. குஜராத் பால விபத்து நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் குஜராத்தின் காந்திநகரில் உயர்மட்ட ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டது.
இதன்பின்பு, சம்பவ பகுதிக்கு பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட்டார். இந்த சம்பவம் பற்றி விசாரிக்க 5 பேர் கொண்ட கமிட்டி ஒன்றையும் குஜராத் அரசு அமைத்து உள்ளது. இந்த வழக்கில் 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த விபத்தில் பெற்றோரில் ஒருவர் அல்லது இரண்டு பேரையும் இழந்த 20 குழந்தைகளின் நலனுக்காக ரூ.5 கோடி நன்கொடை அளிக்க அதானி தொண்டு நிறுவனம் முன்வந்து உள்ளது.
அதிகாரப்பூர்வ ஆவண தகவலின்படி, 7 குழந்தைகள் பெற்றோர் இருவரையும், 12 குழந்தைகள் பெற்றோரில் ஒருவரையும் இழந்துள்ளன. இந்த விபத்தில் கணவரை இழந்த கர்ப்பிணியின் இன்னும் பிறக்காத குழந்தையும் உள்ளது.
இவர்கள் அனைவரையும் சேர்த்து, மொத்தம் 20 குழந்தைகளுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க அதானி தொண்டு நிறுவனம் முன்வந்து, மோர்பி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு உள்ளது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்த சம்பவத்துக்கு அதானி தொண்டு நிறுவனத்தின் தலைவர் பிரீத்தி அதானி வேதனை தெரிவித்து உள்ளார்.