< Back
தேசிய செய்திகள்
குஜராத் பாலம் விபத்து... ஊழலின் விளைவால் நடந்துள்ளது - கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
தேசிய செய்திகள்

"குஜராத் பாலம் விபத்து... ஊழலின் விளைவால் நடந்துள்ளது" - கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
1 Nov 2022 4:06 PM IST

பாலம் கட்டுவதில் எந்த அனுபவமும் இல்லாத நிறுவனத்திடம், ஒப்பந்த பணிகள் வழங்கப்பட்டது ஏன்? என கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆமதாபாத்,

குஜராத்தின் மோர்பி நகரில் வரலாற்று சிறப்புமிக்க தொங்கு பாலம் கடந்த 30-ந்தேதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், பலர் மீட்கப்பட்டும் உள்ளனர். சிலர் சிகிச்சையில் உள்ளனர். தொடர்ந்து மீட்பு, நிவாரண பணிகள் நடந்து வருகின்றன.

இந்த விபத்து தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை, வரும் 14-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி லலித் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த நிலையில் குஜராத் பாலத்தில் நடந்த விபத்து ஊழலின் விளைவால் ஏற்பட்டுள்ளது என டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"மோர்பி தொங்கு பாலத்தில் ஏற்பட்ட விபத்து, மிகப்பெரிய ஊழலின் விளைவால் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். பாலம் கட்டுவதில் எந்த அனுபவமும் இல்லாத, கடிகாரம் தயாரிக்கும் நிறுவனத்திடம், ஒப்பந்த பணிகள் வழங்கப்பட்டது ஏன்? உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஒப்பந்த பணிகள் வழங்கப்பட்டுள்ளதா?"

இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்