< Back
தேசிய செய்திகள்
பாஜக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளி பங்கேற்பு
தேசிய செய்திகள்

பாஜக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளி பங்கேற்பு

தினத்தந்தி
|
27 March 2023 3:30 PM IST

பாஜக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளி பங்கேற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காந்திநகர்,

குஜராத் மாநிலத்தில் கடந்த 2022-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து வன்முறை, மதக்கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தின்போது 2022 பிப். 28-ம் தேதி டோஹட் மாவட்டம் ராதிக்பூர் கிராமத்தை சேர்ந்த கர்பிணியான பில்கிஸ் பானு தனது குடும்பத்துடன் கிராமத்தை விட்டு வெளியேறி வேறு பகுதிக்கு சென்றார்.

அப்போது கர்ப்பிணியான பில்கிஸ் பானுவை 11 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. மேலும், அவரது குழந்தை உள்பட குடும்ப உறுப்பினர்கள் 14 பேரை அந்த கும்பல் கொடூரமாக கொலை செய்தது.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் 11 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த குற்றவாளிகள் 11 பேரையும் தண்டனை காலம் முடியும் முன்னே கருணை அடிப்படையில் குஜராத் அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.

குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாஜக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்ற அரசு நிகழ்ச்சி பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளி பங்கேற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் டஹொட் மாவட்டம் லிம்கிடா பகுதியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகளில் ஒருவனான ஷைலேஷ் பட் பங்கேற்றார். அரசு நிகழ்ச்சி மேடையில் பாஜக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அருகே பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளி ஷைலேஷ் அமர்ந்திருந்தார்.

அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றது தொடர்பாக குற்றவாளி லைலேஷிடம் கேட்டபோது, 'நான் பூஜை செய்ய அங்கு சென்றேன்' என்று கூறினார்.

மேலும் செய்திகள்