< Back
தேசிய செய்திகள்
குஜராத்தில் இன்று ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம்
தேசிய செய்திகள்

குஜராத்தில் இன்று ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம்

தினத்தந்தி
|
21 Nov 2022 10:02 AM IST

குஜராத் சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.

ஆமதாபாத்,

குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 1-ந்தேதி நடக்கும் முதல் கட்ட தேர்தலின்போது 89 தொகுதிகளுக்கும், டிசம்பர் 5-ந்தேதி 2-வது கட்ட தேர்தலின்போது 99 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடத்தப்படும்.

டிசம்பர் 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். குஜராத்தில், 1995-ம் ஆண்டு முதல் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பா.ஜ.க. இந்த முறையும் வெற்றியை தக்க வைத்து கொள்ளும் பணிகளில் இறங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை கைப்பற்ற போராடுகிறது. புதிதாக கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது.

தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகளும் தீவிர பிரசார வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் தரப்பிலும் குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

அதன்படி, சூரத் மாவட்டம், பஞ்ச் ககடாவில் மதியம் 2 மணியளவில் நடைபெறும் பேரணியில் கலந்து கொள்கிறார். ராஜ்கோட்டில் மாலை 3 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது அவர் மத்தியபிரதேச மாநிலத்தில் பாதயாத்திரை நடத்தி வருகிறார். குஜராத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதால் நடைபயணம் இன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நடைபெற்ற இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் ராகுல்காந்தி பிரசாரத்திற்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்