< Back
தேசிய செய்திகள்
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.51 லட்சம் கோடியாக அதிகரிப்பு...!
தேசிய செய்திகள்

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.51 லட்சம் கோடியாக அதிகரிப்பு...!

தினத்தந்தி
|
1 Nov 2022 11:38 AM GMT

அக்டோபர் மாதம் ரூ. 1.51 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளது. இது, இதுவரை வசூலான மாத ஜிஎஸ்டி தொகையில் 2-வது அதிகபட்ச தொகையாகும்.

புதுடெல்லி,

கொரோனாவால் முடங்கியிருந்த பொருளாதாரம் தற்போது மீண்டெழுந்து வருகிறது. தொழில்துறை, வர்த்தகம், உற்பத்தி உள்பட அனைத்து துறைகளின் செயல்பாடுகளும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஜிஎஸ்டி வரி வருவாய் வசூல் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.

இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதத்தில் 1.51 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வருவாய் வசூலாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த அக்டோபர் மாதம் 1 லட்சத்து 51 ஆயிரத்து 718 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளது. இது, இதுவரையிலான மாத ஜிஎஸ்டி வசூலில் 2-வது அதிகபட்ச வசூலாகும்.

இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம்1 லட்சத்து 68 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலானது. இதற்கு அடுத்தபடியாக கடந்த அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் தொகை 1.51 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

தீபாவளி உள்பட முக்கிய பண்டிகைகள் கடந்த ஆண்டு கொண்டாடப்பட்ட நிலையில் தொழில்துறை உள்பட துறைகளில் விற்பனை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த மாதம் ஜிஎஸ்டி வசூல் அதிக அளவில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1.30 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலான நிலையில் இந்த ஆண்டு வசூல் தொகையில் 16.6 சதவிகிதம் அதிகரித்து 1.51 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. அதேபோல், கடந்த செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி வசூல் தொகை 1.48 லட்சம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் 9 ஆயிரத்து 540 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இது கடந்த 2021 அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் வசூலான ஜிஎஸ்டி தொகையான 7 ஆயிரத்து 642 கோடி ரூபாயை காட்டிலும் 25 சதவிகிதம் அதிகமாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்