< Back
தேசிய செய்திகள்
நாளை விண்ணில் பாயும் ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் - கவுண்ட்டவுன் தொடங்கியது

Image Courtesy : @isro

தேசிய செய்திகள்

நாளை விண்ணில் பாயும் ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் - கவுண்ட்டவுன் தொடங்கியது

தினத்தந்தி
|
16 Feb 2024 6:37 PM IST

ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் ‘இன்சாட்-3டிஎஸ்' என்ற செயற்கைகோளை இஸ்ரோ நாளை விண்ணில் செலுத்துகிறது.

சென்னை,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக, 'இன்சாட்-3டிஎஸ்' என்ற செயற்கைகோளை வடிவமைத்துள்ளது. இதனை, ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட்டில் பொருத்தி நாளை (சனிக்கிழமை) மாலை 5½ மணிக்கு இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.

இதற்கான ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மற்றும் செயற்கைகோள் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில், ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 27½ மணி நேர கவுண்ட்டவுன் இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 2 மணி 05 நிமிடத்தில் தொடங்கியது.

வானிலை செயற்கைகோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் 420 டன் எடை கொண்டது. 51.7 மீட்டர் உயரத்துடன் 3 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டின் முதல் நிலையில் 139-டன் உந்துசக்தியைக் கொண்ட திட உந்துசக்தி மோட்டார் பொருத்தப்பட்டு உள்ளது. அத்துடன் 4 உந்துசக்தி நிலைகள் ஒவ்வொன்றும் 40 டன் திரவ உந்துசக்தியை கொண்டுள்ளன.

ராக்கெட்டின் 2-வது நிலையில் 40 டன் உந்து சக்தியுடன் கூடிய எந்திரம், 3-வது நிலையில் 15 டன் திரவ ஆக்சிஜன் மற்றும் திரவ ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட கிரையோஜெனிக் நிலையாகும். எரிபொருள் நிரப்பப்பட்ட நிலையில், ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்