திருமணத்தன்று விஷம் குடித்த மணமக்கள்: மணமகன் உயிரிழப்பு, மணமகள் கவலைக்கிடம்
|மணமக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் திருமணத்தன்று இருவரும் விஷம் குடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தூர்,
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மணமக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் திருமணத்தன்று இருவரும் விஷம் குடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மணமகன் (வயது 21) பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மணமகள் (வயது 20) உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
முன்னதாக, கடந்த பல நாட்களாக மணமகள் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மணமகனை வற்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் தன்னுடைய தொழில் காரணமாக திருமணத்திற்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் தருமாறு அவர் கேட்டுள்ளார். ஆனால் அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளன. செவ்வாய்க்கிழமையன்று ஆர்ய சமாஜ் கோவிலில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்த நிலையில் திருமணத்தன்று மணமகன் விஷம் குடித்துள்ளார். மேலும் இது குறித்து மணமகளிடம் கூறியுள்ளார். இதையடுத்து மணமகளும் விஷம் குடித்துள்ளார்.
இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மணமகன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அதே நேரத்தில் மணமகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.