< Back
தேசிய செய்திகள்
ஜம்மு-காஷ்மீரில் ஆம் ஆத்மி கட்சி முதல் வெற்றி: அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் ஆம் ஆத்மி கட்சி முதல் வெற்றி: அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து

தினத்தந்தி
|
8 Oct 2024 5:32 PM IST

ஜம்மு-காஷ்மீரின் தோடா தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார். இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சி ஜம்மு-காஷ்மீரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

டெல்லி,

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இதில், தேசிய மாநாடு கட்சி, காங்கிரஸ் கூட்டணி 49 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் இந்த கூட்டணி ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியை பிடிக்கிறது. ஜம்மு-காஷ்மீர் முதல்-மந்திரியாக உமர் அப்துல்லா பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்றுள்ளது. ஜம்முவின் தோடா தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் மெஹ்ராஜ் மாலிக் அபார வெற்றிபெற்றுள்ளார். மெஹ்ராஜ் 23 ஆயிரத்து 228 வாக்குகள் பெற்ற நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கஜெய் சிங் 18 ஆயிரத்து 690 வாக்குகள் பெற்று தோல்வியடைந்துள்ளார்.

டெல்லி, பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வரும் நிலையில் குஜராத், கோவாவில் அக்கட்சிக்கு எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தற்போது 5வது மாநிலமாக ஜம்மு-காஷ்மீரில் ஆம் ஆத்மி கால் பதித்துள்ளது.

இந்த வெற்றி தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து பதிவில்,

பாஜகவுக்கு எதிராக தோடா தொகுதியில் வெற்றிபெற்ற ஆம் ஆத்மி வேட்பாளர் மெஹ்ராஜ் மாலிக்கிற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் தேர்தலில் மிகவும் சிறப்பாக செயல்பட்டீர்கள். 5வது மாநிலத்தில் எம்.எல்.ஏ.வை பெற்றுள்ளதற்காக ஒட்டுமொத்த ஆம் ஆத்மி கட்சிக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்'

என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்