கிராம பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினர் வெட்டிக் கொலை
|கலபுரகி அருகே கிராம பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினரை வெட்டிக் கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவான மர்மநபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
பெங்களூரு:
கலபுரகி அருகே கிராம பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினரை வெட்டிக் கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவான மர்மநபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினர்
கலபுரகி மாவட்டம் ஜேவர்கி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மதரி கிராமத்தை சேர்ந்தவர் அசோக் (வயது 45). இவர், கிராம பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினர் ஆவார். நேற்று முன்தினம் இரவு வெளியே சென்று விட்டு அசோக் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அசோக்கை வழிமறித்து உள்ளனர்.
பின்னர் அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அசோக்கை சரமாரியாக வெட்டினார்கள். இதில், பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து ஓடிவிட்டது.
மர்மநபர்களை போலீஸ் தேடுகிறது
உயிருக்கு போராடிய அசோக் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்து விட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஜேவர்கி போலீசார் விரைந்து வந்து அசோக் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அதே நேரத்தில் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜானப்பா, சித்தப்பா, குண்டப்பா ஆகியோர் தான் தனது கணவரை கொலை செய்திருப்பதாக அசோக்கின் மனைவி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
அதாவது பணம் கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் ஜானப்பா மற்றொரு நபருக்கு இடையே இருந்த பிரச்சினையை தீர்க்க அசோக் முயன்றதாகவும், இதுதொடர்பாக எற்பட்ட தகராறில் கொலை நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் வேறு யாரும் கொலை செய்தார்களா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து ஜேவர்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள மர்மநபர்களை தேடிவருகிறார்கள்.