< Back
தேசிய செய்திகள்
கர்நாடகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டம் தொடக்கம்
தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டம் தொடக்கம்

தினத்தந்தி
|
31 Aug 2023 3:02 AM IST

இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் கிரக லட்சுமி திட்டம் தொடக்க விழா மைசூருவில் நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவில் ராகுல்காந்தி, முதல்-மந்திரி சித்தராமையா, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் அமோக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியினர் 5 உத்தரவாத திட்டங்களை அறிவித்தனர். அவை வீடுகள் தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம்(கிரக ஜோதி), இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகை(கிரக லட்சுமி), பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம்(சக்தி திட்டம்), அன்னபாக்ய திட்டத்தில் ரேஷன் கார்டு

தாரர்களுக்கு வீட்டு உறுப்பினர்களை கணக்கிட்டு தலா 10 கிலோ அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் உதவித்தொகை(யுவநிதி) ஆகியவை ஆகும்.

இதில் ஏற்கனவே கிரக ஜோதி, அன்னபாக்ய, சக்தி திட்டம் ஆகியவை அமல்படுத்தப்பட்டு விட்டன. இந்த நிலையில் கிரக லட்சுமி திட்டம் ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி(நேற்று) அமல்படுத்தப்படும் என்று கர்நாடக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று கிரக லட்சுமி திட்டத்துக்கான தொடக்க விழா மைசூரு டவுன் மகாராஜா கல்லூரி மைதானத்தில் வைத்து நடந்தது. இதற்காக அங்கு பிரமாண்ட பந்தல் போடப்பட்டு இருந்தது. மேலும் விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடந்து வந்தன.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமையே மைசூருவுக்கு சென்றிருந்தனர். மேலும் இந்த விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. ஆகியோர் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் திட்டமிட்டபடி நேற்று மகாராஜா கல்லூரி மைதானத்தில் கிரக லட்சுமி திட்ட தொடக்க விழா கோலாகலமாக நடந்தது. விழாவையொட்டி அங்கு ஏராளமான பெண்கள், கட்சி தொண்டர்கள் திரண்டிருந்தனர்.

விழாவில் கலந்து கொள்வதற்காக மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி எம்.பி. ஆகியோர் விமானத்தில் டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு வந்து, அங்கிருந்து தனி விமானம் மூலம் மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்தை வந்தடைந்தனர். அதையடுத்து அவர்கள் காரில் விழா நடைபெறும் இடத்துக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு காங்கிரசார் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விழா சரியாக மதியம் 1 மணியளவில் தொடங்கியது. அதையடுத்து மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் வரவேற்று பேசினார். பின்னர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு மைசூரு தலைப்பாகை அணிவித்து, நினைவுப்பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. அதையடுத்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ரிமோட் பொத்தானை அழுத்தியதும், கிரக லட்சுமி திட்டத்துக்கான காசோலை அட்டை பூக்களின் நடுவில் இருந்து ரிமோட் மூலம் மேலே உயர்த்தப்பட்டு மேடைக்கு கொண்டுவரப்பட்டது.

அதையடுத்து அந்த அட்டையின் மீது மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பூக்களை தூவி கிரக லட்சுமி திட்டத்தை தொடங்கி வைத்தனர். முன்னதாக அவர்கள் குத்துவிளக்கும் ஏற்றினர்.

பின்னர் கிரக லட்சுமி திட்டத்தின் கீழ் பயன்பெற்ற இல்லத்தரசிகளுக்கு அதற்கான ஆணை அட்டைகளும் வழங்கப்பட்டது. அதன்பின்னர் கிரக லட்சுமி திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பெண்கள் மேடையில் ஏறி தலைவர்களுடன் நின்று குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த விழாவையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. டிரோன் கேமரா மூலமும் போலீசார் கண்காணித்தனர். அதுமட்டுமின்றி மகாராஜா கல்லூரி மைதானம் வழியாக போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

இந்த திட்டத்தில் மொத்தம் 1 கோடியே 30 லட்சம் இல்லத்தரசிகள் தகுதி படைத்தவர்கள் ஆவர். ஆனால் இதுவரை 1 கோடியே 10 லட்சம் மட்டுமே இந்த திட்டத்தில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு செப்டம்பர் முதல் மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்காதவர்கள் செப்டம்பர் மாதத்திற்குள் விண்ணப்பித்தால், அவர்களுக்கு அக்டோபர் மாதம் முதல் இந்த உதவித்தொகை கிடைக்கும் என்றும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

முக்கிய தலைவர்கள் மட்டுமே பேசினர்

கிரக லட்சுமி திட்ட தொடக்க விழா நேற்று மைசூருவில் நடந்தது. இந்த விழா மதியம் 1 மணியளவில் தொடங்கி 2¾ மணியளவில் முடிந்தது. சரியாக விழா 1¾ மணி நேரம் நடந்தது. இது அரசு விழா என்பதால் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் பேசவில்லை. முக்கிய தலைவர்களான மந்திரி லட்சுமி ஹெப்பால்கர், துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன

கார்கே, ராகுல் காந்தி எம்.பி., மற்றும் முதல்-மந்திரி சித்தராமையா ஆகியோர் மட்டுமே பேசினர். விழாவில் ராகுல் காந்தி இந்தியில் பேச அதை சரத் பச்சேகவுடா எம்.எல்.ஏ. கன்னடத்தில் மொழி பெயர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களின் செல்போன்களுக்கு குறுந்தகவல்

கிரக லட்சுமி திட்டம் மூலம் நேற்று ஒரேநாளில் 1.10 கோடி பெண்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகை அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் இந்த திட்டத்திற்காக விண்ணப்பித்த பெண்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டதற்கான குறுந்தகவல்கள் அவர்களுடைய செல்போன்களுக்கு அனுப்பப்பட்டது. இதனால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த திட்டத்திற்காக நடப்பு ஆண்டில் ரூ.17,500 கோடி செலவாகும் என்று அரசு கணக்கிட்டு உள்ளது. இந்த திட்டம் மூலம் காங்கிரஸ் அரசு அறிவித்த 5 வாக்குறுதிகளில் 4 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும், வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டமாக யுவநிதி திட்டம் வருகிற டிசம்பர் மாதம் தொடங்கப்படும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு மாதமும் 5-ந் தேதி கிடைக்கும்

கிரக லட்சுமி திட்டம் நேற்று கர்நாடகத்தில் தொடங்கியது. இதன்மூலம் ஒவ்வொரு மாதமும் 5 அல்லது 6-ந் தேதிகளில் இல்லத்தரசிகளின் வங்கி கணக்கில் நேரடியாக இந்த திட்டத்தின் மூலம் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆன்லைன் மூலம் வெற்றிகரமாக விண்ணப்பித்த அனைத்து இல்லத்தரசிகளுக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று திட்டம் தொடங்கியதும் ஏராளமானோருக்கு அவரது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. அவ்வாறு வங்கி கணக்கில் பணம் நேற்று வந்து சேராதவர்களுக்கு இன்று(வியாழக்கிழமை) செலுத்தப்பட்டு விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

4 வாக்குறுதிகள் நிறைவேற்றம்

காங்கிரஸ் அரசு அறிவித்த 5 வாக்குறுதிகளில் சக்தி திட்டம் கடந்த ஜூன் மாதம் 11-ந் தேதியும், அன்னபாக்ய திட்டம் கடந்த மாதம்(ஜூலை) 11-ந் தேதியும், கிரக ஜோதி திட்டம் கடந்த 5-ந் தேதியும் அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் 4-வது வாக்குறுதியான கிரக லட்சுமி திட்டம் நேற்று(30-ந் தேதி) தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்