மெட்ரோ ரெயில்களில் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுக்கும் வாசகங்கள் - பா.ஜனதா மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
|கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்தபிறகு சுவாதி மாலிவாலை பயன்படுத்தி பொய் குற்றச்சாட்டுகளை பா.ஜ.க. கூற வைத்ததாக டெல்லி மந்திரி அதிஷி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. இந்த பரபரப்பான சூழலில் டெல்லியில் ஓடும் சில மெட்ரோ ரெயில்களிலும், சில மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுக்கும் வாசகங்களை யாரோ மர்ம நபர்கள் நேற்று எழுதி வைத்து உள்ளனர்.இது தொடர்பான புகைப்படங்கள் மாநிலம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இது இரு தரப்பினருக்கான மோதலை மீண்டும் தீவிரப்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தின் பின்னணியில் பா.ஜனதா இருப்பதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியிருக்கிறது.
இது தொடர்பாக மாநில மந்திரியும், ஆம் ஆத்மி மூத்த தலைவர்களில் ஒருவருமான அதிஷி செய்தியாளர்களிடம் கூறும்போது, 'கெஜ்ரிவாலை பா.ஜனதா கைது செய்தனர். சிறையில் இன்சுலின் ஊசியை நிறுத்தினர். அவர் சிறையில் இருந்து வெளியே வந்தபிறகு சுவாதி மாலிவாலை பயன்படுத்தி பொய் குற்றச்சாட்டுகளை கூற வைத்தனர். தற்போது அவருடைய உயிருக்கும் அச்சுறுத்தல் விடப்பட்டு இருக்கிறது' என தெரிவித்தார்.
மெட்ரோ ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா இருக்கும்போது, இந்த மிரட்டல் வாசகங்களை எழுதியவரை இதுவரை கைது செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பிய அதிஷி, இதன் பின்னணியில் பா.ஜனதா இருப்பதை இது உறுதி செய்வதாக தெரிவித்தார்.