புதிய குற்றவியல் மசோதாக்கள் மூலம் சர்வாதிகாரத்தை கொண்டுவர முயற்சி - கபில் சிபல் எம்.பி. குற்றச்சாட்டு
|புதிய குற்றவியல் மசோதாக்கள் மூலம் சர்வாதிகார ஆட்சியை கொண்டுவர மத்திய அரசு முயற்சிப்பதாக கபில் சிபல் எம்.பி. குற்றம் சாட்டினார்.
புதுடெல்லி,
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றை மறுசீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அந்த சட்டங்களுக்கு பதிலாக, பாரதீய நீதிச்சட்ட மசோதா, பாரதீய குடிமக்கள் பாதுகாப்பு சட்ட மசோதா, பாரதீய சாட்சி சட்ட மசோதா ஆகிய 3 புதிய குற்றவியல் மசோதாக்களை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த 11-ந் தேதி மக்களவையில் தாக்கல் செய்தார்.
சர்வாதிகார ஆட்சி
இந்நிலையில், இம்மசோதாக்கள் குறித்து முன்னாள் மத்திய சட்ட மந்திரியும், தற்போது சுயேச்சை எம்.பி.யாக இருப்பவருமான கபில் சிபல் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:-
ஆங்கிலேயர் கால சட்டங்களை முடிவுக்கு கொண்டுவர விரும்புவதாக மத்திய அரசு சொல்கிறது. ஆனால், இந்த மசோதாக்கள் மூலம் நாட்டில் சர்வாதிகார ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்று விரும்புவதுபோல் அவர்களது சிந்தனை இருக்கிறது.
சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், அரசு ஊழியர்கள், தலைமை கணக்கு தணிக்கையாளர், இதர அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடிய சட்டங்களை கொண்டுவர அவர்கள் விரும்புகிறார்கள்.
அரசியல் சட்ட விரோதம்
நீதிபதிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். இம்மசோதாக்கள் சட்டமாகி விட்டால், நாட்டின் எதிர்காலத்துக்கு ஆபத்து நேரும்.இவை நாட்டின் அரசியல் சட்டத்துக்கு விரோதமானவை. நீதித்துறையின் வேர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடியவை. நீதித்துறை சுதந்திரத்துக்கு முற்றிலும் முரணானவை. அவர்கள் ஜனநாயகத்தை விரும்பவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
திரும்ப பெறுங்கள்
அதிலும், பாரதீய நீதிச்சட்ட மசோதா, ஆபத்தானது. அது நிறைவேற்றப்பட்டால், அனைத்து அமைப்புகளும் மத்திய அரசின் கட்டளைப்படி நடக்க வேண்டி இருக்கும்.
ஆகவே, 3 மசோதாக்களையும் திரும்ப பெறுமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். நாம் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, என்ன மாதிரியான ஜனநாயகத்தை நீங்கள் விரும்புகிறீர்கள் என்று மக்களிடம் கேட்போம் என்று அவர் கூறினார்.
காங்கிரஸ் கோரிக்கை
இதற்கிடையே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
முன்கூட்டியே எந்த தகவலோ, ஆலோசனையோ இல்லாமல் 3 புதிய குற்றவியல் மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கூட ஒட்டுமொத்த பணிகள் குறித்து தெரியாமல் இருப்பதுபோல் தோன்றுகிறது.
ஆகவே, 3 மசோதாக்களையும் விரிவான பொது விவாதத்துக்கு உட்படுத்த வேண்டும். நிபுணர்கள், நீதிபதிகள், பொதுமக்கள் என பலதரப்பினருடன் ஆலோசனை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.