மராட்டியம், மத்திய பிரதேசத்தில் விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசு வெங்காயம் கொள்முதல்
|மராட்டியம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாயிகளிடம் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்வதை மத்திய அரசு மீண்டும் தொடங்கி உள்ளது.
புதுடெல்லி,
நாட்டின் பல பகுதிகளில் வெங்காயம் விலை உயர்ந்து வருகிறது. விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், வெங்காயம் மீது மத்திய அரசு 40 சதவீத ஏற்றுமதி வரி விதித்தது.
இதற்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், விவசாயிகள் நலனுக்காக அவர்களிடம் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்வதை மத்திய அரசு மீண்டும் தொடங்கி உள்ளது.
மத்திய மந்திரி பேட்டி
இதுகுறித்து மத்திய வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை மந்திரி பியூஷ் கோயல் கூறியதாவது:-
மராட்டியம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாயிகளிடம் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்யும் பணி மீண்டும் ெதாடங்கி உள்ளது. குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரத்து 410 என்ற நிர்ணயிக்கப்பட்ட விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது.
ஏற்றுமதி வரி விதிக்கும்போதே விவசாயிகளிடம் இருந்து கூடுதலாக 2 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய முடிவு செய்தோம். இந்த வெங்காயத்தை மத்திய அரசின் கையிருப்பில் வைத்திருப்போம்.
இதனால், விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று அவர் கூறினார்.