இந்தியாவில் புதிய 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி: மத்திய அரசுக்கு வல்லுனர் குழு பரிந்துரை
|கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் புதிய ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசுக்கு வல்லுனர் குழு பரிந்துரை செய்துள்ளது.
புதுடெல்லி,
உலகை இன்று வரை அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ஐதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல்-இ நிறுவனத்தார் 'கோர்பேவாக்ஸ்' என்ற தடுப்பூசியை உருவாக்கி தயாரித்து வருகின்றனர்.
இந்த 'கோர்பேவாக்ஸ்' தடுப்பூசியை கோவிஷீல்டு அல்லது கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளில் எந்த தடுப்பூசியை 2 டோஸ்கள் செலுத்தி இருந்தாலும், செலுத்தி 6 மாதங்கள் ஆனவர்கள் செலுத்திக்கொள்ளலாம் என தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்பக்குழுவின் கொரோனா பணிக்குழு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால், கொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு முதன்மை தடுப்பூசிகளில் எதை முதலில் போட்டுக்கொண்டிருந்தாலும், அதற்கு பூஸ்டர் டோசாக பயன்படுத்த அனுமதிக்கப்படும் முதல் தடுப்பூசி என்ற பெயர், இந்த 'கோர்பேவாக்ஸ்' தடுப்பூசிக்கு கிடைக்கும்.
தற்போது கோவேக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்கள், எந்த தடுப்பூசியை முதல் 2 டோஸ்களாக செலுத்திக்கொண்டார்களோ, அதைத்தான் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாகவும் செலுத்திக்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.