5 மாநில தேர்தலை கருத்தில் கொண்டே சமையல் கியாஸ் மானியம் உயர்வு - காங்கிரஸ் குற்றச்சாட்டு
|5 மாநில தேர்தலை கருத்தில் கொண்டே சமையல் கியாஸ் மானியம் உயர்த்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
புதுடெல்லி,
மத்திய அரசின் 'உஜ்வாலா' திட்ட பயனாளிகளுக்கு சமையல் கியாஸ் சிலிண்டருக்கு கூடுதலாக ரூ.100 மானியம் வழங்க மத்திய மந்திரி சபையில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி இந்த பயனாளிகளுக்கான மானியத்தொகை ரூ.200-ல் இருந்து ரூ.300 ஆக உயர்த்தப்படுகிறது.
மத்திய அரசின் இந்த முடிவு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அஜோய் குமாரிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதிலளிக்கையில், 'மத்திய பிரதேசம், சத்தீஸ்கார், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில தேர்தலை கருத்தில் கொண்டே இந்த மானிய உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்தல்கள் முடிந்ததும் பா.ஜனதா மீண்டும் கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்தும். பின்னர் மக்களவை தேர்தலை முன்னிட்டு குறைப்பார்கள்' என குற்றம் சாட்டினார்.
தேர்தல்கள் வரும்போது இப்படி விலை குறைப்பது பிரதமர் மோடியின் பழக்கம் என்றும் அவர் குறைகூறினார்.