< Back
தேசிய செய்திகள்
மியான்மர் அகதிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடா? - மத்திய அரசு விளக்கம்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

மியான்மர் அகதிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடா? - மத்திய அரசு விளக்கம்

தினத்தந்தி
|
18 Aug 2022 2:37 AM IST

மியான்மர் அகதிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதா என்ற கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்தது.

புதுடெல்லி,

மியான்மரில் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட நிலையில் ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் ஏராளமானோர் அங்கிருந்து தப்பி வங்காளதேசத்தில் அடைக்கலம் புகுந்தனர். சிலர் டெல்லிக்கு வந்து தங்கி உள்ளனர்.

இந்த நிலையில் ரோஹிங்கியா அகதிகள் 1,100 பேருக்கு டெல்லியில் பக்கர்வாலா பகுதியில் பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான அடுக்கு மாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியான ஒரு செய்தியை மத்திய வீட்டுவசதித்துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி டுவிட்டரில் நேற்று பதிவேற்றம் செய்தார். இதற்காக மத்திய அரசை அவர் பாராட்டியும் இருந்தார்.

இதையொட்டி மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "ரோஹிங்கியா அகதிகள் சட்டவிரோதமாக குடியேறி உள்ளனர். அவர்களுக்கு டெல்லியில் பக்கர்வாலா பகுதியில் பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வழங்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அவர்களை வேறு இடத்துக்கு மாற்ற டெல்லி அரசு முன்மொழிந்துள்ளது. ஆனால் அவர்களை நாடு கடத்துவதற்கு வெளியுறவு அமைச்சகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால். அவர்கள் தற்போது இருக்கிற கஞ்சன்குஞ்ச் பகுதியில் தொடர்வதை டெல்லி அரசு உறுதி செய்யுமாறு கூறி உள்ளோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்