< Back
தேசிய செய்திகள்
மழைக்கால கூட்டத்தொடர்: அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு
தேசிய செய்திகள்

மழைக்கால கூட்டத்தொடர்: அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு

தினத்தந்தி
|
16 July 2024 3:52 PM IST

மழைக்கால கூட்டத்தொடர் நெருங்கி வரும் நிலையில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

டெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 22ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. மழைக்கால கூட்டத்தொடரின் 2ம் நாளான ஜூலை 23ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூட உள்ள நிலையில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஜூலை 21ம் தேதி (ஞாயிற்றுகிழமை) நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கும்படி காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட நாடாளுமன்ற கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

அதேவேளை, அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 1993ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி காங்கிரஸ் பேரணியின்போது மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான அரசில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அப்போது காங்கிரஸ் இளைஞரணி தலைவியாக மம்தா பானர்ஜி செயல்பட்டு வந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து ஆண்டுதோறும் ஜூலை 21ம் தேதி மம்தா பானர்ஜி தலைமையில் தியாகிகள் தினம் என்ற பெயரில் பேரணி நடைபெற்று வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உருவான பின்னரும் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்து வகையில் ஆண்டுதோறும் பேரணி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் பேரணி நடத்தப்படுவதால் மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்