< Back
தேசிய செய்திகள்
பவன் ஹன்ஸ் நிறுவன பங்கு விற்பனை ரத்து : மத்திய அரசு நடவடிக்கை

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

'பவன் ஹன்ஸ்' நிறுவன பங்கு விற்பனை ரத்து : மத்திய அரசு நடவடிக்கை

தினத்தந்தி
|
4 July 2023 4:22 AM GMT

பவன் ஹன்ஸ் பங்கு விற்பனை நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசின் முதலீடு மற்றும் பொதுச்சொத்து நிர்வாகத்துறை அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

ஹெலிகாப்டர் சேவை வழங்கும் பவன் ஹன்ஸ் நிறுவனத்தில், மத்திய அரசு 51 சதவீத பங்குகளும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான ஓ.என்.ஜி.சி. 49 சதவீத பங்குகளும் வைத்துள்ளன.

அந்த நிறுவனத்தின் பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டது. கடந்த ஆண்டு இதற்கான டெண்டர் விடப்பட்டது.

அதிக விலைக்கு கேட்டிருந்த 3 நிறுவனங்களை உள்ளடக்கிய ஸ்டார்9 மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் என்ற கூட்டு நிறுவனத்துக்கு பங்குகளை விற்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால், கூட்டு நிறுவனத்தில் இடம்பெற்ற அல்மாஸ் குளோபல் ஆப்பர்சூனிட்டி பண்ட் எஸ்.பி.சி. என்ற நிறுவனத்தின் மீது தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் வழக்கு நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. அதனால், கடந்த மே மாதம், பவன் ஹன்ஸ் விற்பனை நடவடிக்கை நிறுத்திவைக்கப்பட்டது.

ரத்து

இந்நிலையில், பவன் ஹன்ஸ் பங்கு விற்பனை நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசின் முதலீடு மற்றும் பொதுச்சொத்து நிர்வாகத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஸ்டார்9 மொபிலிட்டி நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தோம். அதற்கு அந்நிறுவனம் அளித்த பதிலை கவனமாக ஆய்வு செய்ததில், அந்த நிறுவனத்தை பவன் ஹன்ஸ் நிறுவன விற்பனை நடவடிக்கையில் தகுதிநீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், தற்போதைய விற்பனை நடவடிக்கையும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்