கேரளாவில் அரசு பேருந்து - பள்ளி சுற்றுலா பேருந்து மோதி கோர விபத்து - 9 பேர் பலி
|கேரளாவில் அரசு பேருந்தும், பள்ளி சுற்றுலா பேருந்தும் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
பாலக்காடு,
கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் ஊட்டிக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். இந்த சுற்றுலா பஸ்சில் 43 மாணவர்கள், 5 ஆசிரியர்கள் உள்ளிட்ட 51 பேர் இருந்துள்ளனர்.
இந்த நிலையில், பாலக்காடு-வடகஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற சுற்றுலா பஸ்சானது முன்னால் சென்று கொண்டிருந்த கேரள அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது.
இதனையடுத்து சுற்றுலா பஸ்சானது சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் சுற்றுலா பஸ்சில் இருந்த 5 மாணவர்கள் உள்ளிட்ட 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 41 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துமனையில் சிகிச்சைக்கான அனுமதித்துள்ளனர்.
இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் இந்த விபத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.