மசரத் ஆலமின் ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் லீக் அமைப்பை தடை செய்தது மத்திய அரசு
|ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் லீக் அமைப்பினர் தேசவிரோத மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
பிரிவினைவாத தலைவர் மசரத் ஆலம் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் லீக் அமைப்பை மத்திய அரசு தடை செய்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் தேச விரோத மற்றும் பிரிவினைவாத செயல்களில் ஈடுபட்டதாகவும், பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவு அளித்ததாகவும் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக உள்துறை மந்திரி அமித் ஷா கூறியிருப்பதாவது:
நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை, ஒருமைப்பாட்டிற்கு எதிராக செயல்படும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்ப முடியாது என்றும், கடும் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் பிரதமர் மோடியின் அரசு தெளிவுபடுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் லீக் (மசரத் ஆலம் பிரிவு) சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பும் அதன் உறுப்பினர்களும் ஜம்மு காஷ்மீரில் தேசவிரோத மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிப்பது மற்றும் ஜம்மு காஷ்மீரில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ மக்களை தூண்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அமித் ஷா கூறியுள்ளார்.