< Back
தேசிய செய்திகள்
கவர்னர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலஅவகாசம் நிர்ணயிக்க வேண்டும் : தமிழ்நாடு சபாநாயகர்
தேசிய செய்திகள்

கவர்னர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலஅவகாசம் நிர்ணயிக்க வேண்டும் : தமிழ்நாடு சபாநாயகர்

தினத்தந்தி
|
28 Jan 2024 3:30 AM IST

பல மாநிலங்களில் கவர்னர்களால் பல சட்டமுன்வடிவுகள் பல மாதங்களாக, பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு, சுப்ரீம் கோர்ட்டு வரை பல மாநில அரசுகள் சென்றுள்ளன என்று தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு கூறினார்.

மும்பை,

அகில இந்திய சபாநாயகர்களின் 84-வது மாநாடு மராட்டிய மாநிலம், மும்பையில் உள்ள மராட்டிய விதான் சபாவில் நேற்று தொடங்கியது. இதில் மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா, மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோரும் பங்கேற்றனர்.

மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

2006-2011-ம் ஆண்டு தமிழ்நாட்டில் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டதை அறிந்து அவர்களை மீண்டும் அவைக்கு அழைத்து வந்து அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள செய்தார். இதுதான் ஜனநாயக மாண்பு.

தமிழ்நாட்டில் தற்போது, 132 ஆளுங்கட்சி உறுப்பினர்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 101 பேரும் உள்ளனர். கடந்த 2½ ஆண்டுகளில், எதிர்க்கட்சி உறுப்பிர்களுக்கு 107 மணி நேரம் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு 78 மணி நேரம் தான் பேச அனுமதிக்கப்பட்டு உள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்களுடைய கருத்துகள் அவையில் அதிகளவில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது தான் முதல்-அமைச்சரின் எண்ணமாகும்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளால் நிறைவேற்றப்படுகின்ற சட்டமுன்வடிவுகள் அனைத்திற்கும் ஜனாதிபதி ஒரிரு நாட்களில் அனுமதி அளித்து விடுகிறார். ஆனால், பல மாநிலங்களில் கவர்னர்களால் பல சட்டமுன்வடிவுகள் பல மாதங்களாக, பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு, சுப்ரீம் கோர்ட்டு வரை பல மாநில அரசுகள் சென்றுள்ளன.

இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான், நான், சிம்லாவில் நடைபெற்ற சபாநாயகர்கள் மாநாட்டில், "கவர்னர்கள், சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு கால அவகாசம் முறையாக நிர்ணயிக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினேன். அதையே தற்போதும் நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

அதோடு கடந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கவர்னர் ஆற்றிய உரையில் பல பகுதிகளைச் சேர்த்தும், நீக்கியும் வாசித்து தமிழக சட்டமன்ற மாண்பை இழிவுபடுத்தியதை நினைவுகூர விரும்புகிறேன்.

தற்போது கேரள மாநில கவர்னர் தனது உரையின் கடைசி பக்கத்தை மட்டும் அவையில் வாசித்து, ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஜனநாயக மாண்பை, ஜனநாயக முறையில், நாட்டு மக்களும், ஆளும் கட்சிகளும் பின்பற்றினால் தான் நம்முடைய நாட்டிற்கு பெருமை சேர்க்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்