மேற்கு வங்காள கவர்னருக்கு கருப்புக்கொடி: திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் பிரிவு போராட்டம்
|மேற்கு வங்காள கவர்னருக்கு கருப்புக்கொடி காட்டி திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் பிரிவு போராட்டம் நடத்தினர்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநில கவர்னர் சி.வி.ஆனந்தபோஸ், வடமாவட்டங்களில் 4 நாள் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார். சிலிகுரியில் உள்ள வடக்கு வங்காள பல்கலைக்கழகத்தில் நேற்று அவர் 13 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் அந்நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் வடக்கு வங்காள பல்கலைக்கழகத்துக்கு சென்றார்.
அவரது கார் உள்ளே நுழைந்தவுடன், திரிணாமுல் காங்கிரசின் மாணவர் பிரிவான திரிணாமுல் சாத்ரா பரிசத்தை சேர்ந்தவர்கள் திடீரென கருப்புக்கொடி காண்பித்து போராட்டம் நடத்தினர். ''திரும்பி போ'' என்றும் கோஷமிட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு போட்டியாக, கவர்னர் இணை அரசாங்கம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்தியதாக ஒரு மாணவர் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து யாரும் கைது செய்யப்படவில்லை. இருப்பினும், பாதுகாப்பு குளறுபடி குறித்து விசாரிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.