மசோதாக்களை ஆய்வு செய்ய கவர்னருக்கு அதிகாரம் உள்ளது - சுப்ரீம் கோர்ட்டு
|மசோதாக்களை கவர்னர் நிலுவையில் வைத்துள்ளதாக கூறி பஞ்சாப் அரசு தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
புதுடெல்லி,
பஞ்சாப் மாநிலத்தில் 7 மசோதாக்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார் எனக்கூறி அம்மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. கவர்னருக்கு எதிராக பஞ்சாப் அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற்றது.
அப்போது, 7 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார் என்றும், தமிழ்நாடு மற்றும் கேரளாவிலும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கவர்னர்கள் நிலுவையில் வைத்துள்ளதாக பஞ்சாப் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பேசிய தலைமை நீதிபதி, ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்கும் முன் அதனை ஆய்வு செய்யவும், அதுவரை அதை நிறுத்திவைக்கவும் கவர்னருக்கு அதிகாரம் உள்ளது என தெரிவித்தார். அத்துடன், மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வதற்கு முன்னதாகவே, கவர்னர்கள் கட்டாயமாக செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அப்போது, மசோதா ஏன் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது என்ற காரணத்தை அரசிடம் பகிர்ந்து வருவதாக கவர்னர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இறுதியில், இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என பஞ்சாப் கவர்னருக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதாக தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அரசுகளும் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.