திருப்பதி தேவஸ்தானத்திடம் பிரசாதமாக ரூ.16 கோடி கேட்டு கடிதம் எழுதிய அரசு: காரணம் என்ன..?
|கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் இலவசமாக பாட புத்தகங்கள் வழங்க ரூ.16 கோடி தேவைப்படுகிறது.
திருப்பதி,
ஆந்திராவில் உள்ள கல்லூரிகள் கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. மாணவர்களுக்கு இலவசமாக பாடப்புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் இலவசமாக பாட புத்தகங்கள் வழங்க ரூ.16 கோடி தேவைப்படுகிறது.
நிதி நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு இலவச புத்தகம் வழங்க முடியவில்லை என ஆந்திர மாநில உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனால் கடந்த ஆண்டு கல்லூரி முடித்துச்சென்ற மாணவர்களிடம் இருந்து திரும்ப பெறப்பட்ட பழைய பாடப்புத்தகங்களை வாங்கி இந்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.
மொத்தம் ஆந்திராவில் உள்ள 452 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களுக்கு பாட புத்தகம் வழங்க ரூ.16 கோடி தேவைப்படுகிறது. இதற்காக ஆந்திர அரசு திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடிதம் எழுதி உள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு இலவசமாக அன்னதானம் மற்றும் லட்டு உள்ளிட்டவைகள் வழங்கி வருவது போல அன்னபிரசாத திட்டத்தில் ரூ.16 கோடியை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். அடுத்த தேவஸ்தான கூட்டத்தில் புத்தகங்கள் வழங்குவது குறித்து உறுப்பினர்களிடம் ஆலோசிக்கப்பட்டு நிதி வழங்கப்படும் என கூறியுள்ளனர்.