பொதுமக்கள் முதலீட்டில் நெடுஞ்சாலைகள் அமைக்கும் திட்டம் - நிதின் கட்காரி
|பொதுமக்கள் முதலீட்டில் நெடுஞ்சாலைகள் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வருவதாகவும். சிறிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம் எனவும் மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார்.
பொதுமக்கள் முதலீட்டில் நெடுஞ்சாலைகள்
டெல்லியில் நேற்று இந்திய தொழிற்கூட்டமைப்பு (பிக்கி) ஏற்பாடு செய்திருந்த சாலைகள், நெடுஞ்சாலைகள் மாநாட்டில் மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் நெடுஞ்சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டங்களில் பொதுமக்கள் முதலீடு செய்யும் வாய்ப்பை மத்திய அரசு ஏற்படுத்தித்தர உள்ளதாக தெரிவித்தார்.
8 சதவீதம் லாபம்
இதுபற்றி அவர் பேசும்போது கூறியதாவது:-
பங்குச்சந்தையில் உள்கட்டமைப்பு முதலீடு டிரஸ்டுகளை மத்திய அரசு விரைவில் பட்டியலிடும். இதில் சிறிய அளவிலான முதலீட்டாளர்கள் (சில்லரை முதலீட்டாளர்கள்) முதலீடு செய்யலாம். இதில் சாதாரண பொதுமக்கள் நெடுஞ்சாலை அமைத்தல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டங்களில் முதலீடு செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
இந்த முதலீட்டுக்கு 7 முதல் 8 சதவீத லாபம் உறுதி செய்யப்படும்.
நெடுஞ்சாலைகள் விரிவாக்கம்
70 சதவீத சரக்கு போக்குவரத்து மற்றும் 90 சதவீத பயணிகள் போக்குவரத்து தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக நடைபெறுகின்றன. எனவே தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்த வேண்டியது உள்ளது.
நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகள் 1.47 லட்சம் கி.மீ. தொலைவுக்கு உள்ளன. இது ஒட்டுமொத்த சாலைகளில் 2.3 சதவீத பங்களிப்பை செய்கிறது. 2024-ம் ஆண்டு இறுதிக்குள் தேசிய நெடுஞ்சாலைகளின் அளவை 2 லட்சம் கி.மீ. தொலைவுக்கு விரிவாக்கம் செய்து விடுவோம்.
நாட்டின் வர்த்தகம், ஏற்றுமதிகள், தொழில் ஆகியவற்றில் தளவாடங்களுக்கான விலை, முக்கிய சவாலாக அமைந்துள்ளது. இது ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் 12 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் இது 14 முதல் 16 சதவீத அளவுக்கு உள்ளது. சீனாவில் இதன் அளவு 8 முதல் 10 சதவீதம்தான்.
இந்தியாவிலும் இதை 10 சதவீத அளவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் எனது இலக்கு.
நமது முதல் முன்னுரிமை நீர்வழிச்சாலைகள், இரண்டாவது முன்னுரிமை ரெயில்வே, மூன்றாவது முன்னுரிமை சாலைகள், நான்காவது முன்னுரிமை வான்வழி ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.