மதுப்பிரியர்களுக்கு அரசு இலவசமாக மதுபானம் வழங்க வேண்டும் என நூதன போராட்டம்
|கர்நாடகத்தில் பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம் அனுமதிப்பதுபோல், மதுப்பிரியர்களுக்கு அரசு சார்பில் இலவசமாக மதுபானம் வழங்க கோரி உடுப்பியில் மதுப்பிரியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மங்களூரு:-
விலை உயர்வு
நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் எரிவாயு விலை விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்து விட்டன. மேலும் தக்காளி உள்ளிட்ட காய்கறி மற்றும் பழங்களின் விலையும் தற்போது கிடுகிடுவென உயர்ந்து வருகின்றன. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் அன்றாடம் குடும்பம் நடத்தவே மக்கள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள். இதனால், அத்தியாவாசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
இந்த நிலையில், மதுபானங்களின் விலை உயர்வை கண்டித்து மதுபாட்டிலுக்கு மாலை அணிவித்து பூஜை செய்து மதுப்பிரியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட வினோத சம்பவம் கர்நாடகத்தில் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-
மதுப்பிரியர்கள் போராட்டம்
கர்நாடகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்-மந்திரி சித்தராமையா 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் மதுபானங்கள் மீதான கலால் வரியை உயர்த்தி அவர் அறிவிப்பை வெளியிட்டார். கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் மதுபானங்களின் விலையும் கணிசமாக உயரும் நிலை உள்ளது. இது மதுப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதற்கு பலரும் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதில், ஒரு படி மேலே சென்று உடுப்பியை சேர்ந்த மதுப்பிரியர்கள், மதுபான விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தி உள்ளனர். உடுப்பி டவுனில் நேற்று மதுப்பிரியர்கள் ஒன்று சேர்ந்து மதுபான உயர்வை கண்டித்து அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அப்போது அவர்கள், மதுபாட்டிலுக்கு மாலை அணிவித்து சூடம் ஏற்றி ஆரத்தி எடுத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இலவச மதுபானம்
மேலும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட மதுப்பிரியர்கள் மாலை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மதுப்பிரியர்கள் கூறுகையில், கர்நாடக அரசு பட்ஜெட்டில் மதுபானங்கள் மீதான வரியை உயர்த்தி உள்ளது. இதனால் மதுபானங்கள் விலை உயரும். இதனால் ஏழை தொழிலாளிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். கூலி தொழிலாளர்கள் நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு உடல் அசதிக்காக மதுபானம் வாங்கி குடிக்கிறார்கள். தற்போது விலை உயர்வால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்கள் விலை உயரும்போது எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் மதுபானங்களின் விலை உயர்ந்தால் எவரும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. மாநில அரசு 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு அரசு பஸ்சில் பயணம் உள்ளிட்ட திட்டங்களை அறிவித்துள்ளது. இதேபோல், மதுப்பிரியர்களுக்கும் இலவச மதுபானம் வழங்க வேண்டும்.
மதுப்பிரியர்களின் நிலையை கருத்தில் கொண்டு அரசு இலவச மதுபானம் வழங்க வேண்டும் அல்லது மதுபானம் விலையை குறைக்க வேண்டும் என்றனர்.
மதுப்பிரியர்களின் இந்த போராட்டத்தை அந்தப்பகுதி மக்கள் வினோதமாக பார்த்து சென்றனர்.