< Back
தேசிய செய்திகள்
ஒலேநரசிப்புராவில் பணி இடமாற்றம் செய்ததால் அரசு ஊழியர் தற்கொலை
தேசிய செய்திகள்

ஒலேநரசிப்புராவில் பணி இடமாற்றம் செய்ததால் அரசு ஊழியர் தற்கொலை

தினத்தந்தி
|
5 Sept 2023 12:15 AM IST

ஒலேநரசிப்புராவில் பணி இடமாற்றம் செய்ததால் மனமுடைந்த அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது குடும்பத்தினர் அவருடைய உடலை அதிகாரியின் அலுவலகம் முன்பு வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹாசன்:-

அரசு ஊழியர்

ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா தாலுகா லட்சுமிபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் கிரண்(வயது 31). அரசு ஊழியரான இவர் ஒலேநரசிப்புரா டவுனில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் திடீரென அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு யல்லேசபுரா கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதனால் அவர் மனமுடைந்து இருந்து வந்தார். மேலும் குடும்பத்தினர் யாருடனும் பேசாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பணி இடமாற்றம்

நேற்று காலையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அவரது உடலை அவருடைய குடும்பத்தினர் ஒலேநரசிப்புராவில் உள்ள வட்டார வளர்ச்சி அதிகாரி அலுவலகம் முன்பு வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கிரணை தேவையில்லாமல் பணி இடமாற்றம் செய்ததாகவும், அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், இதனால் அரசு அதிகாரிகள் பாக்கியம்மா, சுனில் குமார் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பரபரப்பு

இதுபற்றி அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்