திருவனந்தபுரத்தில் இளம்பெண் முன் நிர்வாணமாக நின்ற அரசு ஊழியர் கைது
|திருவனந்தபுரத்தில் தனியாக நடந்து சென்ற இளம்பெண் முன் நிர்வாணமாக நின்ற அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை அதிகரித்து வருகிறது. சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரம் மியூசியம் பகுதியில் இரவில் தனியாக நடந்து சென்ற பெண்ணை வழிமறித்து தாக்கி, அவர் அணிந்திருந்த தங்க நகைகளை பறிக்க முயற்சி நடந்தது.
அந்த சம்பவம் நடந்து இரு தினங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் இன்னொரு இளம்பெண் முன் அரசு ஊழியர் ஒருவர் நிர்வாண போஸ் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
திருவனந்தபுரத்தின் மையப்பகுதியான குரவன் கோணத்தில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள், சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற்சி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளன.
நேற்று முன்தினம் காலை 9 மணி அளவில் அந்த பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண் அலுவலகத்திற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவர் செல்லும் வழியில் நிறுத்தப்பட்டு இருந்த கார் கதவு திடீரென்று திறந்தது. அதில் இருந்த நபர் நிர்வாணமாக வெளியே வந்து போஸ் கொடுத்தார். இதனால் இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். அதில் இருந்து அவர் மீண்டு வருவதற்குள் இளம்பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து கட்டிப்பிடிக்க, அந்த நபர் முயன்றார். உடனே இளம் பெண் கூச்சல் போட்டார். அதைத்தொடர்ந்து அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் சம்பவ இடத்துக்கு ஓடி வந்தனர். அதற்குள் அந்த நபர் காரை ஓட்டியபடி அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
இதுபற்றி திருவனந்தபுரம் மியூசியம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் கார் நம்பரை வைத்து விசாரணை நடத்தினார்கள். அப்போது இளம்பெண் முன் நிர்வாணமாக போஸ் கொடுத்தவர் திருவனந்தபுரத்தில் தொழில்துறை இயக்குனர் அலுவலகத்தில் பணிபுரியும் வைஷாக் (வயது 38) என்பது தெரியவந்தது. இதையடுத்து மியூசியம் போலீசார் விரைந்து சென்று அரசு அலுவலகத்தில் இருந்த வைஷாக்கை கைது செய்தனர். விசாரணைக்குப் பின் அவரை நேற்று திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.