18 கோவில்களில் கைவரிசை காட்டிய அரசு பள்ளி ஆசிரியர்
|உத்தரகன்னடா, சிவமொக்கா, ஹாவேரி மாவட்டங்களில் 18 கோவில்களில் கைவரிசை காட்டிய அரசு பள்ளி ஆசிரியர், கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார்.
கார்வார்:
உத்தரகன்னடா (கார்வார்) மாவட்டம் எல்லாப்பூர் தாலுகாவில் மஞ்சிகேரி, குல்லாப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், அங்கோலா தாலுகாவில் உள்ள கோவில்களில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது. அதாவது, கோவில்களில் புகுந்து நகை, உண்டியல் பணம் மற்றும் தங்க நகைகள், வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடி வந்தனர். இதுகுறித்து அந்த போலீஸ் நிலையங்களில் ஏராளமான புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து, கோவில்களில் திருடும் மர்மநபர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுவர்தன் உத்தரவின்பேரில் எல்லாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் கோவில்களில் திருடி வந்த 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர்கள் ஹாவேரியை சேர்ந்த வசந்தகுமார் (வயது 40), ராணிபென்னூரை சேர்ந்த சலீம் (28) என்பதும், அவர்களில் வசந்தகுமார் ராட்டிஹள்ளியில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் அவர்கள், உத்தரகன்னடா மாவட்டம் எல்லாப்பூர், அங்கோலா, சிவமொக்கா மாவட்டம் ரிப்பன்பேட்டை, ஒசநகர், ஹாவேரி மாவட்டம் ஹம்சபாவி, ஹிரேகெரூர், ஹாவேரி ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களில் புகுந்து திருட்டு சம்பவங்களை அரங்கேற்றி வந்தது தெரியவந்தது. அந்த பகுதிகளில் 18 கோவில்கள் அவர்கள் கைவரிசை காட்டியதும் தெரியவந்துள்ளது.
இந்த திருட்டு சம்பவங்களில் அரசு பள்ளி ஆசிரியரான வசந்தகுமார் மூளையாக செயல்பட்டுள்ளார். அவர்கள் 2 பேரும் கடந்த 4 ஆண்டுகளாக கோவில்களில் திருடி அந்த பொருட்களை விற்று ஆடம்பரமாக வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து ரூ.19.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. கைதான 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.