சுப்பிரமணியசாமியின் வீட்டுக்கு பாதுகாப்பு - டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்
|சுப்பிரமணியசாமியின் வீட்டுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தார். இதற்காக அவருக்கு டெல்லியில் அரசு பங்களா வழங்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் அவரது பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், அரசு பங்களாவை காலி செய்யுமாறு அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் அரசு பங்களாவை மீண்டும் தனக்கு ஒதுக்கி தரக்கோரி சுப்பிரமணிய சாமி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டது. ஆனால் வழக்கு விசாரணையின்போது, சுப்பிரமணியசாமிக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்திருந்தது.
ஆனால் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனை எதிர்த்து சுப்பிரமணியசாமி தனது குடியிருப்புக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்காததை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையே இந்த மனுவை நீதிபதி யஷ்வந்த் வர்மா விசாரித்தார்.
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், மனுதாரர் சுப்பிரமணியசாமிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளதால், அவரது பாதுகாப்பை உறுதிசெய்ய அவர் வசிக்கும் தனியார் குடியிருப்பில் உள்ள வீட்டில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன என தெரிவித்தார்.
மேலும் டெல்லியில் ஒதுக்கப்பட்ட அரசு பங்களா மத்திய அரசிடம் நவம்பர் 5-ந்தேதி (நாளை) ஒப்படைக்கப்படும் என்று சுப்பிரமணியசாமி தரப்பிலும் உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து சுப்பிரமணியசாமியின் மனுவை முடித்துவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.