< Back
தேசிய செய்திகள்
மராட்டியத்தில் ஷிண்டே அரசு 2 மாதத்தில் கவிழும் - ஆதித்ய தாக்கரே
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் ஷிண்டே அரசு 2 மாதத்தில் கவிழும் - ஆதித்ய தாக்கரே

தினத்தந்தி
|
15 Jan 2023 5:04 AM IST

ஏக்நாத் ஷிண்டே அரசு இன்னும் 2 மாதத்தில் கவிழ்ந்துவிடும் என முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே கூறினார்.

வேலைவாய்ப்பு கண்காட்சி

தானேயில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே பிரிவினர் ஏற்பாடு செய்திருந்த வேலைவாய்ப்பு கண்காட்சியில் முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மண்ணின் மைந்தர்களின் உரிமைக்காக போராட்டங்களை நடத்தி வந்த சிவசேனாவில் தற்போது தீவிர மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது மண்ணின் மைந்தர்களின் குறிப்பாக இளைஞர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக வேலைவாய்ப்பு கண்காட்சிகளை நடத்துகிறோம். இளைஞர்கள் இதன் ஒரு பகுதியாக மாறி உள்ளனர். இதனால் புதிய மற்றும் வலுவான சிவசேனா தற்போது உருவாகி வருகிறது.

பா.ஜனதா மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாலாசாகேப் பஞ்சி சிவசேனாவின் கூட்டணி அரசு மக்களை பிளவுபடுத்துவதை தவிர மராட்டியத்திற்கு வேறு எதுவும் செய்யவில்லை.

உண்மையான சிவசேனா

இந்த துரோகிகளின் அரசாங்கம் அடுத்த 2 மாதங்களில் கவிழ்ந்துவிடும். நம்மை விட்டு பிரிந்தவர்கள் துரோகிகள், எங்களுடன் கைகோர்த்து நிற்பவர்கள் உண்மையான சிவசேனா தொண்டர்கள்.

வேலையில்லா திண்டாட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் தொழில் திட்டங்களை பற்றி சிந்திக்காமல், எப்படி அரசியல் செய்யலாம் என்று யோசிப்பதிலேயே ஆளும்கட்சிகள் மும்முரமாக உள்ளன. இதுவரை ஏக்நாத் ஷிண்டே அரசு ஒரு பெண்ணை கூட மந்திரி சபையில் சேர்க்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சியை சேர்ந்த ராஜன் விச்சாரே, 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சி மீண்டும் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் செய்திகள்