< Back
தேசிய செய்திகள்
வனத்துறை பகுதியை விஸ்தரிக்க அரசு முக்கியத்துவம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு
தேசிய செய்திகள்

வனத்துறை பகுதியை விஸ்தரிக்க அரசு முக்கியத்துவம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு

தினத்தந்தி
|
26 Jun 2022 4:39 AM IST

வனத்துறை பகுதியை விஸ்தரிக்க அரசு முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும், இதற்கு தேவையான நிதியை ஒதுக்கவும் தயாராக இருப்பதாகவும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பெங்களூரு விதானசவுதாவில் நேற்று வனத்துறை வளர்ச்சி ஆணையம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-

அரசு முக்கியத்துவம்

உலகமெங்கும் தற்போது சுற்றுச்சூழல் மற்றும் பருவ நிலை மாற்றத்தை மிகப்பெரிய சவாலாக எதிர் கொள்ள வேண்டியுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்காமல் இருப்பதால், இதுபோன்ற நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாகவே கர்நாடக பா.ஜனதா அரசு வனப்பகுதிகளை விஸ்தரிப்பு செய்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. நாட்டிலேயே கர்நாடகத்தில் தான் வனத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பட்ஜெட்டில் சிறப்பு நிதியும் ஒதுக்கப்பட்டு இருந்தது.

அரசு திட்டங்களை அறிவிப்பதுடன் நிற்காமல், அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. கர்நாடகத்தில் தற்போது இருக்கும் வனப்பரப்பை விஸ்தரிக்கும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட வேண்டும். அடுத்த 50 ஆண்டுகளுக்கு பின்பு சுற்றுச்சூழல், பருவ நிலை எப்படி இருக்கும் என்பதை அறிந்து, அதற்கான திட்டத்தை தயாரித்து வனத்துறையினர் வழங்க வேண்டும். அந்த திட்டத்தை செயல்படுத்த அரசு தயாராக உள்ளது.

15 நாட்கள் அலுவலகத்தில்...

வனப்பகுதியை விஸ்தரிக்க தேவையான நிதியை ஒதுக்க அரசு தயாராக இருக்கிறது. தைலமரங்களால் வானிலையில் மாற்றம் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். மழையின் அளவு குறைவதாகவும் தெரிவித்துள்ளனர். அதனால் தைலமரங்களை வளர்ப்பதில் வனத்துறையினர் கவனம் செலுத்த வேண்டாம். வனத்துறை வளர்ச்சி ஆணையத்தின் தலைவராக உள்ள தாரா அனுராதா, வனத்துறையின் வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்தி பணியாற்றுகிறார். இதுபோல், மற்ற ஊழியர்களும் பணியாற்ற வேண்டும்.

வனத்துறை சம்பந்தப்பட்ட பணிகளை தங்களது வீட்டு வேலையாக நினைத்து செய்து முடிக்க வேண்டும். மாநிலத்தில் வனப்பகுதியை விஸ்தரிக்கும் விவகாரத்தில் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். வனத்துறை அதிகாரிகள் அலுவலகத்திலேயே இருந்து விடக்கூடாது. மாதத்தில் 15 நாட்கள் அலுவலகத்திலும், அடுத்த 15 நாட்கள் வனப்பகுதிகளுக்கும் சென்று அதிகாரிகள் பணியாற்ற வேண்டும். அரசின் திட்டங்களை சரியாக செயல்படுத்தி 100 சதவீத வெற்றி கிடைத்தால், வனத்துறையினரின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

மேலும் செய்திகள்