அரசு ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
|சித்ரதுர்காவில் கிராம பஞ்சாயத்து ஊழியர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ. மற்றும் தாலுகா பஞ்சாயத்து அதிகாரி நெருக்கடி கொடுத்தது காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சித்ரதுர்கா:-
பஞ்சாயத்து ஊழியர் தற்கொலை
சித்ரதுர்கா மாவட்டம் ஒலல்கெரே தாலுகா ஒசதுர்கா போலீஸ் எல்லைக்குட்பட்ட உப்பாரகேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் திப்பேசாமி (வயது 58). இவர் ஒலல்கெரே தாலுகா உப்பாரகேனஹள்ளி கிராம பஞ்சாயத்தில் இரண்டாம் நிலை ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்தநிைலயில் கடந்த சில நாட்களாக கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் திப்பேசாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பணியை செய்யவிடாமல் தடுத்ததாக தெரிகிறது. இதனால் நேற்று முன்தினம் திப்பேசாமி பணிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் ஜனகல் கிராமத்தில் உள்ள உறவினருக்கு சொந்தமான தோட்டத்தில் திப்பேசாமி இறந்து கிடந்தார். மாலையில் தோட்டத்திற்கு சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, ஒசதுர்கா போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், திப்பேசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சித்ரதுர்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.
தற்கொலை கடிதம் கிடைத்தது
இதற்கிடையே தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக திப்பேசாமி கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த கடிதம் போலீசாருக்கு கிடைத்தது. அதில் எனது தற்கொலைக்கு ஒலல்கெரே கிராம பஞ்சாயத்து செயல் அதிகாரி ரவி மற்றும் உப்பாரகேனஹள்ளி கிராம பஞ்சாயத்தை சேர்ந்த 30 உறுப்பினர்கள்தான் காரணம். அவர்கள் பணியை செய்ய விடாமல், தடுத்ததுடன் பணியிடை நீக்கம் செய்வதாக கூறி மிரட்டினர். இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதி வைத்திருந்தார். இதையடுத்து அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், இதுகுறித்து குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒலல்கெரே தாலுகா பஞ்சாயத்து செயல் அதிகாரி ரவி என்பவர், உப்பாரகேனஹள்ளி கிராம பஞ்சாயத்திற்கு சென்றிருந்தார். அப்போது ரவி பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்த உறவினர் ஒருவருக்கான நில ஆவணங்களை எடுத்ததாக கூறப்படுகிறது. இதை திப்பேசாமி பார்த்து, ரவியிடம் கேட்டுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ரவி, திப்பேசாமியிடம் உன்னை பணியிடை நீக்கம் செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த திம்பேசாமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
எம்.எல்.ஏ. மீது குற்றச்சாட்டு
இதற்கிடையில் திப்பேசாமியின் மனைவி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் ஒலல்கெரே பா.ஜனதா எம்.எல்.ஏ. சந்திரா, தாலுகா பஞ்சாயத்து செயல் அதிகாரி ரவி ஆகியோர் எனது கணவரை பணி செய்ய விடாமல் தடுத்து, பணியிடை நீக்கம் செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளனர். இதனால் தனது கணவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார். ஆனால் திப்பேசாமி எழுதிய கடிதத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. சந்திராவின் பெயரை குறிப்பிடவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் திப்பேசாமியின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஒசதுர்கா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திப்பேசாமி யார் என்று தெரியாது - பா.ஜனதா எம்.எல்.ஏ.
இதுகுறித்து ஒலல்கெரே பா.ஜனதா எம்.எல்.ஏ. சந்திரா கூறுகையில், திப்பேசாமி யார் என்பது தெரியாது. அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் யாரையும் மிரட்டவில்லை. திப்பேசாமிக்கு நான் நெருக்கடி கொடுத்தாக கூறுவது உண்மையில்லை. அவரை பணியிடை நீக்கம் செய்யும்படி நான் யாரிடமும் கூறவில்லை. இது வதந்தி, இதை யாரும் நம்ப வேண்டாம் என்றார்.